தேனி மாவட்டம் கூடலூர் அருகே கருநாக்கமுத்தன் பட்டியை சேர்ந்தவர் முத்துமாயன் (வயது 80). இவரது மகன் கணேசன் (43). தேங்காய் வெட்டும் தொழிலாளி. கடந்த சில நாட்களாக கணேசன் மனநிலை பாதிக்கப்பட்டதுபோல் சுற்றித்திரிந்தார். இதனால் அவரது மனைவி கோவித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார். மனைவியை பிரிந்து தனது தந்தையுடன் வாழ்ந்து வந்த கணேசன் வேலைக்குச் செல்லாமல் சுற்றித் திரிந்துள்ளார்.
மேலும் முத்துமாயனுடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார். இதனால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் வீட்டில் இருந்த முருங்கை மரத்தை நேற்று இரவு கணேசன் வெட்டியுள்ளார். இதனை தட்டிக்கேட்ட முத்துமாயன் அவரை சத்தம் போட்டுள்ளார். பின்னர் 2 பேரும் தூங்கச் சென்றனர். தனது தந்தை தன்னை திட்டியதை மனதில் வைத்துக்கொண்டு இருந்த கணேசன் இன்று காலை திடீரென தேங்காய் வெட்டும் அரிவாளை எடுத்து முத்துமாயனை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த முத்துமாயனின் தலையை துண்டித்ததால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடினர்.
அங்கு முத்துமாயன் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துமாயன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கணேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.