தமிழக செய்திகள்

65% மக்களால் நிராகரிக்கப்பட்ட தவெக.. 'Sofa' அரசியலால் வாக்களித்தவர்கள் நம்பிக்கையையும் இழந்து வருகிறது - உதயநிதி

வாக்களித்த மக்களின் நம்பிக்கையையும் கூட இந்த புதிய அரசு இழந்து வருகிறது என்பது வெளிப்படை.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சியமைக்க 118 பெரும்பான்மை தேவைப்பட்ட நிலையில் திமுக கூட்டணியில் 5 இடங்கள் வென்ற காங்கிரஸ் தவெகவுக்கு தாவியது.

மேலும் திமுக கூட்டணியில் தலா 2 இடங்களை வென்ற விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக தெரிவித்தன. குடியரசு தலைவர் ஆட்சி வரக் கூடாது என்பதற்காகவே இந்த ஆதரவு என்றும் திமுக உடனான உறவு தொடரும் என்றும் அவை தெரிவித்தன.

தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை விஜய் முதல்வர் பொறுப்பேற்றார். திங்கள்கிழமை கூடிய சட்டசபையில் 3ஆம் நாளான இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதற்கிடையே அதிமுகவில் சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி தலைமையில் ஒரு அணி உருவாகி அவர்கள் தவெகவுக்கு ஆதரவு அளித்தனர். மேலும் அமமுகவின் ஒரே எம்எல்ஏ காமராஜும் ஆதரவு அளித்தார்.

இதனால் இன்று வாக்கெடுப்பில் தவெக 144 வாக்குகள் பெற்று பெரும்பான்மையை நிரூபித்தது. முன்னதாக இன்று சட்டசபையில் எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவெக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் திமுக வெளிநடப்பு செய்தது.

இந்த சூழலில் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தமிழ்நாட்டு மக்களில் 65 சதவீத வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழக அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தோம்.

தூய சக்தி என்று சொல்லி மக்களை ஏமாற்றிய ஆளுங்கட்சி குதிரை பேரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டு வருகிறது. மேலும், மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முயற்சிக்காமல், பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது.

இதனால், வாக்களித்த மக்களின் நம்பிக்கையையும் கூட இந்த புதிய அரசு இழந்து வருகிறது என்பது வெளிப்படை.

மக்கள் தீர்ப்பால் பதவி நாற்காலி கிடைக்காத காரணத்தால், 'sofa' அரசியலை அரங்கேற்றும் த.வெ.க. அரசின் மீது பெரும்பான்மை மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்ற உணர்வை சட்டப்பேரவையில் பிரதிபலித்து உரையாற்றினோம்." என்று குறிப்பிட்டுள்ளார்.