கடந்த 2024 நவம்பர் முதல் 2025 அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில், பாகிஸ்தானில் 331 குழந்தைகளுக்கு ஹெச்.ஐ.வி. தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள டான்சா நகரின் THQ அரசு மருத்துவமனையில், பயன்படுத்தப்பட்ட ஊசிகளை மீண்டும் பயன்படுத்தியதே இந்த தொற்றுப் பரவலுக்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
2024-ன் பிற்பகுதியில் ஒரு உள்ளூர் மருத்துவர் இந்த பாதிப்பைக் கண்டுபிடித்து எச்சரித்ததைத் தொடர்ந்து, மார்ச் 2025-ல் அந்த மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
பிபிசி (BBC Eye) நடத்திய 32 மணிநேர ரகசியப் புலனாய்வில், அங்குள்ள மருத்துவப் பணியாளர்கள் பாதுகாப்பற்ற முறையில் ஊசிகளைப் பயன்படுத்துவது வீடியோ ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில், பலமுறை பயன்படுத்தக்கூடிய மருந்து குப்பிகளில் (vials), பயன்படுத்தப்பட்ட ஊசிகளையே குறைந்தது 10 முறை மீண்டும் பயன்படுத்தியுள்ளனர்.
ஒரே மருந்து குப்பியில் இருந்து பல குழந்தைகளுக்கு மருந்து செலுத்தப்பட்டுள்ளது. மருத்துவப் பணியாளர்கள் கிருமி நீக்கம் செய்யப்பட்ட கையுறைகள் (sterile gloves) அணியாமல், பலமுறை நோயாளிகளுக்கு ஊசி செலுத்தியுள்ளனர்.
பயன்படுத்தப்பட்ட ஊசிகள் சேகரிக்கப்பட்டு, அவை மீண்டும் பயன்படுத்துவதற்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது போலத் தெரிகிறது.
இந்த ஆதாரங்கள் இருந்தபோதிலும், மருத்துவமனை அதிகாரிகள் இதனை மறுத்துள்ளனர். மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளரான டாக்டர் காசிம் புஸ்தார், இந்த வீடியோ உண்மையானது இல்லை என்றும், ஒருவேளை தான் பதவி ஏற்பதற்கு முன்பு எடுக்கப்பட்டதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் இதுபோன்ற சம்பவம் நிகழ்வது இது முதல்முறையல்ல. ஏற்கனவே கடந்த 2019ஆம் ஆண்டு, ராடோ டெரோ நகரத்தில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
இந்த தொற்றுகளுக்கும் பாதுகாப்பற்ற மருத்துவ நடைமுறேயே காரணமாக இருந்தது.
மேலும் கராச்சியில் கடந்தாண்டு ஒரு அரசு மருத்துவமனையில் போட்ட ஊசிகளை மீண்டும் பயன்படுத்தியதால் குறைந்தது 84 நோய்த்தொற்று வழக்குகள் கண்டறியப்பட்டன.