அதிமுக கழகம் தோற்றுவிக்கப்பட்டு 54 ஆண்டுகள் நிறைவடைந்து 55வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதையொட்டி, கோடிக்கணக்கான தொண்டர்களுக்கு சசிகலா தனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அனைவரும் ஒன்றிணைய வேண்டிய காலம் வந்துவிட்டதாக அனைந்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலர் சசிகலா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், அதிமுக தொடக்கத்தின் வரலாற்றுப் பின்னணியை நினைவுகூர்ந்த அவர், 1972 ஆம் ஆண்டில் ஏழை எளிய மக்களுக்காக எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட இந்த இயக்கம் அவரது இறுதிமூச்சு வரை காப்பாற்றப்பட்டதாகவும், அதன் பிறகு ஜெயலலிதாவால் இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக வளர்த்தெடுக்கப்பட்டதாகவும் பெருமிதத்துடன் தெரிவித்தார். அந்தப் பயணத்தில் தானும் பங்களித்திருப்பதை யாராலும் மறுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் ஒரு சிலரின் சுயநலமான முடிவுகளாலும், குறுகிய கால ஆதாயங்களைத் தேடியதாலும் இந்த இயக்கம் தொடர்ச்சியான சறுக்கல்களையும் தோல்விகளையும் சந்தித்து வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். ஆனாலும், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் வழியில் வந்த உண்மையான தொண்டர்கள் இன்றளவும் நம்பிக்கையோடும் உறுதியோடும் தொடர்ந்து பயணித்து வருவதாக அவர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
கழகத் தொண்டர்கள் அனைவரின் மனதிலும் உள்ள ஒரே கேள்வி "பிரிந்து சென்றவர்கள், விலக்கப்பட்டவர்கள், ஒதுங்கி நிற்பவர்கள் அனைவரும் எப்போது ஒன்றிணைவார்கள்?" என்பதுதான் என்று குறிப்பிட்ட சசிகலா, அண்ணாவின் பொன்மொழியை நினைவுபடுத்தி, கடந்த காலப் பிளவுகளை மறந்து அனைவரும் ஒரே அணியில் திரள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
எனவே, இது நாள் வரை “நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்” என்று சொன்ன அறிஞர் அண்ணாவின் கொள்கைகளை மனதில் வைத்து தொண்டர்களின் எண்ணங்கள் ஈடேறிட அனைவரும் ஒன்றிணைய வேண்டிய காலம் வந்துவிட்டது. இதற்கு மேலும், வேடிக்கை பார்த்து கொண்டிருந்தால் இந்த இயக்கத்தை காப்பாற்றுவது மிகவும் கடினமாகிவிடும்.
“இன்னும் நூற்றாண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும்” என்று எந்த நம்பிக்கையில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சூளுரைத்தார்களோ, அந்த நம்பிக்கை என்றைக்கும் வீண் போய்விடக்கூடாது என்பதை மிகவும் வலியுறுத்தி கேட்டுகொள்கிறேன். இந்த இயக்கம், ஒன்றுபட்ட, வலிமைமிக்க, பேரியக்கமாக மீண்டும் மலர வேண்டும் எனவும், மீண்டும் அம்மாவின் ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் எனவும், தமிழக மக்களுக்கு மீண்டும் ஒரு பொற்கால ஆட்சியாக அது அமையட்டும் எனவும் இந்நாளில் எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்” என்று சசிகலா தெரிவித்துள்ளார்.