தமிழக செய்திகள்

‘நெல்லுக்கு ஊக்கத்தொகை வழங்கக்கூடாது என்றது ஆலோசனைதான், கட்டாயமல்ல’ - முதலமைச்சர் குற்றச்சாட்டுக்கு நிர்மலா சீதாராமன் பதில்

தமிழ்நாடு அரசு நெல்லுக்கு வழங்குகின்ற ஊக்கத்தொகையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசு கூறியது ஆலோசனைதான், கட்டாய உத்தரவு அல்ல என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் தேர்தல் பிரச்சாரத்தில் நேற்று முன்தினம் (ஏப்.10) பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக அரசு நெல்லுக்கு ஊக்கத்தொகையாக ரூ.2,500 கோடிக்கும் மேல் வழங்கியதாக தெரிவித்தார்.

மேலும் தமிழ்நாடு அரசு நெல்லுக்கு வழங்குகின்ற ஊக்கத்தொகையை மறுபரிசீலனை செய்ய வேண்டும், வழங்கக்கூடாது என்றும் மத்திய அரசு கடிதம் அனுப்பியதாக குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பல தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் இது ஓர் ஆலோசனையே தவிர, கட்டாய உத்தரவு அல்ல என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அவர்,

“வேளாண் துறையில் மாநில அரசுகள் வழங்கும் ஊக்கத்தொகை தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வழங்கிய கடிதம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் செலவினத்துறையின் செயலாளர் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால், ஊட்டச்சத்து பாதுகாப்பு, சுயசார்பு (Atmanirbharta) மற்றும் நிலையான விவசாயம் ஆகிய தேசிய முன்னுரிமைகளுக்கு ஏற்ப, மாநிலங்களின் ஊக்கத்தொகைக் கொள்கைகளை பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் சிறுதானியங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் அமைக்குமாறு செலவினத் துறைச் செயலாளர், மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கு 09.01.2026 அன்று ஒரு கடிதம் எழுதியிருந்தார்.

இந்தக் கடிதம் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட ஓர் ஆலோசனையே தவிர, அது ஒரு கட்டாய உத்தரவு அல்ல.

மாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட இந்தத் தகவல், இந்தியாவின் நீண்டகால உணவு மற்றும் பயிர் பாதுகாப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு ஆக்கப்பூர்வமான மற்றும் நேர்மறையான அணுகுமுறையாகும்.

மாநிலங்கள் தங்களது விவசாயக் கொள்கைகளை விரிவான தேசிய முன்னுரிமைகளுடன் ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்தக் கடிதம் எழுதப்பட்டது. இத்தகைய இலக்குகளுடன் இணைந்து செயல்படுவது மாநிலங்களுக்கு ஒரு சுமை அல்ல; அது விவசாயிகள், நுகர்வோர் மற்றும் ஒட்டுமொத்த நாட்டிற்கும் நன்மை பயக்கும் ஒரு கூட்டுப் பொறுப்பாகும்.

இதை ஒரு திணிப்பாக சித்தரிக்க முயல்வதோ அல்லது அதன் நோக்கத்தைத் திட்டமிட்டுத் தவறாகப் புரிந்துகொள்வதோ உண்மைகளைத் திரித்துக் கூறுவது ஆகும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.