தமிழக செய்திகள்

‘கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை’ அதிமுகவிற்குத்தான் பொருந்தும் - மாணிக்கம் தாகூர் விமர்சனம்

அதிமுகவை முதலில் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என இபிஎஸ்க்கு மாணிக்கம் தாகூர் பதிலடி.

ஓமலூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது காங்கிரஸ் குறித்துப் பேசிய அவர், காங்கிரஸின் நிலை பரிதாபமாக உள்ளது. தேர்தலுக்கு முன்பு திமுகவுடன் கொள்கை கூட்டணி என்றனர். இப்போது பதவிக்காக தவெகவுடன் சென்றுவிட்டனர். இதில் கொள்கை எங்கு உள்ளது?” எனப் பேசியிருந்தார்.

இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் காங்கிரஸ் மாநிலத்தலைவர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில்,

“‘கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை’ யாருக்குப் பொருந்துமோ இல்லையோ, இரட்டை இலையை வைத்துக் கொண்டே டெபாசிட் இழந்து வரும் அதிமுகவிற்கு மிகக் கச்சிதமாகப் பொருந்தும்.

​மத்தியில் பாஜகவிற்கு அடிமையாக இருந்துவிட்டு, இப்போது கொள்கை பேசும் இபிஎஸ்-ன் இரட்டை வேடத்தை மக்கள் அறிவார்கள். எங்களை விமர்சிப்பதை விட்டுவிட்டு, உங்கள் கட்சியை முதலில் காப்பாற்றிக் கொள்ளுங்கள் எடப்பாடியாரே.” எனக் குறிப்பிட்டுள்ளார்.