அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சென்னை வில்லிவாக்கம் பகுதியில் இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
“ஒவ்வொருவரும் தொகுதிகளை ஆய்வு செய்ய முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். எங்கள் பணிகளை 3 பிரிவுகளாக பிரித்து செயல்படுகிறோம். பெண்கள் பாதுகாப்பு, கஞ்சா ஒழிப்பு, டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைப்பது என்பதுதான் அது.
த.வெ.க. ஆட்சி சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டும். போதைப்பொருள் விற்பனை செய்தால் கண்டிப்பாக குண்டர் சட்டம் பாயும். போதைப்பொருள் விற்பனை செய்பவர் மற்றும் அதை வாங்குவர் மீது குண்டர் சட்டம் பாயும்.
கள்ள சந்தையில் மதுபானம் விற்பனை செய்தாலும், அவர்கள் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாயும்.
த.வெ.க.வின் பெயரை சொல்லியோ, அல்லது எங்களது பெயரை சொல்லியோ அரசு அலுவலகங்களில் எந்தவித தலையீடும் இருக்க கூடாது என்று சொல்லி இருக்கிறோம்.
த.வெ.க.வினர் யாரும் டெண்டர் விஷயத்தில் தலையிடக்கூடாது. பூஜ்ஜிய ஊழல், பூஜியம் கமிஷனை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கைகள் இருக்கும். 3 மாதங்களில் அரசு துறையில் லஞ்சம் ஒழிக்கப்படும்.
அறிவிக்கப்படாத மின் வெட்டு இனி இருக்காது. அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வரும் போது வீடியோ பதிவு செய்ய வேண்டும். புகாரை பெறும் அதிகாரியுடன் சேர்த்து வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம்.
ஒட்டு மொத்தமாக, சிறந்த அரசு நிர்வாகத்தை வழங்க வேண்டும் என்பதே முதல்-அமைச்சரின் குறிக்கோள். எங்களின் செயல்தான் பேசும். முன்னாள் முதல்-அமைச்சர், முன்னாள் அமைச்சர்களை பழிவாங்கும் நடவடிக்கையில் ஒருபோதும் ஈடுபட மாட்டோம். கோப்புகள் எங்கே தேங்குகின்றன என்பதை கண்டறிய ஒரு டேஷ்போர்டு அமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.” என தெரிவித்தார்.