லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் தன்னிடம் இருந்த இரண்டு லேப்டாப்களை மட்டுமே பறிமுதல் செய்துள்ளதாகவும், நாட்டில் நிலவும் சில பிரச்சனைகளை திசை திருப்பவே சோதனை நடத்தப்படிருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியின் போது நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக இருந்த கே.என்.நேரு மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.
அவர் வகித்து வந்த துறையில் 2,538 உதவி மற்றும் இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நியமனங்களுக்கு ரூ.634 கோடி லஞ்சம் பெற்றதாக புகார் கூறப்பட்டது.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி தமிழக டி.ஜி.பி.க்கு அமலாக்கத்துறை ஆதாரங்களுடன் கடிதம் அனுப்பி இருந்தது.
இதையடுத்து இன்று சென்னை, திருச்சி, கோவை, வேலூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் உள்ள கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர்கள் வீடுகள் உள்பட 25-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் திருச்சி தில்லை நகரில் செய்தியாளர்களை சந்தித்த நேரு, திமுகவை யாராலும் அசைக்க முடியாது என்றும், திமுக என்றைக்குமே நிலைத்திருக்கும் என தெரிவித்துள்ளார்.
கே.என்.நேரு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தமிழகத்தில் சிறைச்சாலைகளில் இருந்து கைதிகள் தப்பித்து வெளியே செல்கின்றனர். இதுபோன்று நாட்டில் நிலவும் பிரச்சனைகளை திசை திருப்பவே முயற்சி செய்கின்றனர்.
கடந்த திமுக ஆட்சியில் போடப்பட்ட வழக்கு தான் தற்பொழுது தொடர்கிறது. இதற்கு முன்னதாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியின் போதும், எங்கள் மீது பல வழக்குகள் போடப்பட்டன.
ஆனால் அந்த வழக்குகளையெல்லாம் நீதிமன்றத்தில் வாதாடி, நாங்கள் வெளியே வந்தோம்.
அதேபோன்று இந்த வழக்கு குறித்தும் நீதிமன்றத்தை நாட உள்ளோம். என் மீது உயர்நீதிமன்றம் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யும் படி அறிவுறுத்தியது, அதை எதிர்த்து நான் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளேன்.
தாராபுரத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் திமுக மூன்றாவது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது. அதேபோன்று மதுராந்தகத்திலும் இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளோம்.
கடந்த காலத்தில் காங்கிரஸ், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய தலைமைகள் திமுகவை எதிர்த்தன. தற்போது விஜய் திமுகவை எதிர்க்கிறார், ஆனால் திமுக என்றைக்குமே நிலையானதாக இருக்கும்.
திமுகவை எதிர்த்தவர்கள் தான் மாறுவார்களே தவிர, திமுக என்றைக்குமே நிலையாகத்தான் இருக்கும்” என தெரிவித்தார்.