நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற 33-வது பட்டமளிப்பு விழாவில் மாநிலப் பாடலான 'தமிழ்த்தாய் வாழ்த்து' மூன்றாவதாகப் பாடப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய மனோன்மணியம் சுந்தரனாரின் பெயரிலேயே அமைந்த பல்கலைக்கழகத்திலேயே, அப்பாடலுக்கு முன்னுரிமை தராமல் 3-வது இடத்திற்குத் தள்ளியது தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் கடும் கண்டனங்களை பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார். 21
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில்,
“மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடம். தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன?
தமிழ்நாட்டில் இனிமேல் அரசின் சார்பில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும், அது பல்கலைக்கழக நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே ஒரு புதிய சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நான் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதுதொடர்பாக பேசி வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.