தமிழக செய்திகள்

கரூரில் அன்று மக்களோடு நின்றவர் யார், தவிக்கவிட்டுச் சென்றவர் யார் என்று மக்களுக்குத் தெரியும்..!- கனிமொழி எம்பி

கரூர் அட்லஸ் கலையரங்கத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

கரூர் சம்பவத்தின்போது மக்களோடு நின்றவர்கள் யார்.. தவிக்கவிட்டு சென்றவர்கள் யார் என்று மக்களுக்கு நன்றாக தெரியும் என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

விஜய் கரூர் பயணம்

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்த 32 பேர் குடும்பத்துக்கு இன்று முதலமைச்சர் விஜய் அரசு பணி ஆணை வழங்க உள்ளார். முன்னதாக, இன்று பிற்பகல் 12 மணியளவில் கரூர் அட்லஸ் கலையரங்கத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது, முதலமைச்சர் விஜய் கரூர் சம்பவம் தொடர்பாக திமுகவையும், காவல்துறையை சாடியும் பேசினார்.

நாடகம்

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் பேசுகையில்,"கூட்டம் அதிகமா இருக்குன்னு கரூர் போலீஸ் எங்களை அலர்ட் பண்ணிருக்கலாம்ல? எங்க கிட்ட கேட்காமலே மீட்டிங்கை கேன்சல் பண்ணிருக்கலாம்.

ஆனா, அப்படி எதையும் செய்யாமல்.. HIGHWAYல இருந்து போலீஸே எங்களை உள்ளே கூட்டிட்டு வந்து விட்ட நாடகம்லாம் இருக்கு பாருங்க..

கரூர் போலீஸை அன்னைக்கு முழுசா நம்பிட்டேங்க.. பேசும்போது THANKS எல்லாம் சொன்னேன்.

இப்படி ஒரு நாடகம் நடக்கும்னு எனக்கு தெரியாது" என்றார்.

கனிமொழி பதிலடி

விஜய் உரையாற்றியது குறித்து திமுக எம்பி கனிமொழியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அவர் கூறுகையில்," எல்லோருக்குமே அவர்அவர்களுக்கு பொறுப்பு என்று ஒன்று இருக்கிறது. அதை புரிந்துக்கொள்ள வேண்டும். நான் அதுகுறித்து விரிவாக சொல்ல விரும்பவில்லை.

ஏனென்றால் விசாரணையில் இருக்கக்கூடிய விஷயம், நானாவது பொறுப்பாக அதுகுறித்து பேசாமல் இருப்பது நல்லது என நினைக்கிறேன்.

ஆனால், அந்தநேரத்தில் கூட மக்களோடு நின்றவர்கள் யார்? மக்களுக்கு உதவியவர்கள் யார்? தவிக்கவிட்டு அங்கிருந்து சென்றவர்கள் யார் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும்" என்றார்.