பாமக, இந்த அரசின் கூட்டணியில் இணையுமா, இணையாதா? என்பதை பாஜகவிடம் கேட்டுவிட்டு தான் முடிவு செய்யும். ஏனென்றால் பாமகவுக்கு, உரிமையாளர், ஓனர் எல்லாமே பாஜக தான் என்று அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற சமூக நீதி கூட்டணியின் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது. கூட்டணித் தலைவர்களும், தொண்டர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், தொகுதிகளில், மிகுந்த உற்சாகத்துடன் களப்பணியாற்றி வருகின்றனர்.
தவெக அரசின் கடந்த 4 மாத கால சிறப்பான செயல்பாடுகளும், முதலமைச்சரின் திட்டங்களும், மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. இதன் காரணமாக இடைத்தேர்தலில், எங்கள் கூட்டணிக்கான வெற்றி உறுதியானது.
பொதுத்தேர்தலில், 234 தொகுதிகளிலும் போட்டியிட வேண்டியிருப்பதால், தலைவர்கள் அனைத்து தொகுதிகளுக்கும் சென்று பிரசாரம் செய்ய போதிய நேரம் கிடைக்காது. ஆனால், இடைத்தேர்தலில் குறிப்பிட்ட தொகுதிகளில், போதிய நேரம் கிடைப்பதால், தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொள்வதும், தொண்டர்களை நேரடியாக சந்திப்பதும் இயல்பான ஒன்றாகும்.
இடைத்தேர்தலில் தலைவர்கள், தீவிரமாக பிரசாரம் செய்வதை வைத்து தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதாக கூற முடியாது. கடந்த காலங்களில், நடைபெற்ற இடைத்தேர்தல்களிலும், அனைத்து கட்சித் தலைவர்களும், இதேபோன்று தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்பது செயற்கையாக உருவாக்கப்பட்ட கூட்டமல்ல. தலைமுறை தலைமுறையாக, இயல்பாகத் திரண்ட மக்கள் கூட்டமாக, விசிக வளர்ந்து வருகிறது. இளைஞர்களும், ஜென் இசட் தலைமுறையினரும், பெருமளவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில், இணைந்து வருகின்றனர். கட்சித் தலைவர் தொண்டர்கள் மீது காட்டும் அன்பும், அவர்களை வழிநடத்தும் விதமும், இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
பாமக எடுக்கும் முடிவுகள் அனைத்தும், பாஜகவின் விருப்பத்திற்கு உட்பட்டதாகவே உள்ளன. பாமகவுக்கு, பாஜகவே உரிமையாளராக செயல்படுகிறது. பாஜக என்ன சொல்கிறதோ? அதைத்தான் பாமக செய்யும். நிலை உள்ளது. எனவே பாமக, தங்கள் ஓனரான, பாஜகவை கேட்டுவிட்டு தான், இந்தக் கூட்டணியில் இணைவதா வேண்டாமா? என்று முடிவு செய்யும். இதில் பாமகவின் சுயேச்சையான முடிவுகளுக்கு இடமில்லை.
திமுகவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், சமூக நீதி, மாநில உரிமை, சனாதன எதிர்ப்பு மற்றும் திராவிடக் கோட்பாடுகளின் அடிப்படையில் ஒரே பாதையில் பயணிக்கும் இயக்கங்களாகவே உள்ளன. கோட்பாட்டு ரீதியாக இரு இயக்கங்களும் எப்போதும் ஒன்றுபட்டே செயல்பட்டு வருகின்றன.
இப்போது சூழ்நிலை காரணமாக, தேர்தல் சூழ்நிலை காரணமாக அணி மாறி இருந்தாலும், கோட்பாடு அடிப்படையில் நாங்கள் ஒன்றாக தான் பயணிக்கிறோம்.
மாணவர் விடுதி ஒன்றில் நாங்கள் ஆய்வு நடத்திக் கொண்டிருந்தபோது, அங்கு மாணவர்கள், மட்டனுக்கு பதிலாக, பீப் மாட்டிறைச்சி வேண்டும் என்று கேட்டனர். நான் அதை பரிசீலிப்போம் என்று மாணவர்களிடம் கூறினேன். ஆனால் அதில் முடிவு எடுக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு தான் உள்ளது.
ஆனால், இதை பயன்படுத்தி, வடமாநிலங்களைப் போல், உணவைக் காரணம் காட்டி, மாட்டுக்கறி விவகாரத்தை முன்னிறுத்தி, தமிழ்நாட்டிலும் மத அரசியல் செய்ய ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் கிளை அமைப்புகள் முயற்சி செய்கின்றன. இத்தகைய மதவாத அரசியலுக்கு, தமிழ்நாட்டில் ஒருபோதும் இடம் கிடைக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.