நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவையில் விஜய்யின் தவெக 108 தொகுதிகளை கைப்பற்றியது.
ஆட்சியமைக்க தேவையான 118 தொகுதிகளைப் பெற மற்றக் கட்சிகளிடம் ஆதரவுக் கோரிவந்தது.
இதில் திமுக கூட்டணியில் இடம்பெற்று 5 இடங்கள் வென்ற காங்கிரஸ் உடனே ஆதரவு தெரிவித்தது.
தொடர்ந்து, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட இடதுசாரிகளும் நேற்று ஆதரவு தெரிவித்தன.
விஜய் நேற்று மாலை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து மீண்டும் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
முதலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற 2 இடங்களை கொண்ட ஐயுஎம்எல் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததாக கூறப்பட்டது.
ஆனால் ஐயுஎம்எல் அந்த செய்திகளை மறுத்து, தவெகவுக்கு ஆதரவு இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தது.
மேலும் விசிக ஆதரவு தருவதாக வாய்வழியாக கூறப்பட்டாலும் கடிதம் இன்று தான் வழங்கப்படுகிறது.
2 இடங்கள் கொண்ட விசிக ஆதரவு கடிதம் வழங்கும் வரை விஜய் ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லை.
தவெகவுக்கு இன்னும் 1 இடம் தேவைப்படுவதால் அதுவரை அவர் பதவியேற்பு இழுபறியே என்று கூறப்படுகிறது.
விசிக ஆதரவு கடிதம் இன்று ஆளுநர் மாளிகைக்கு செல்வது பொறுத்தே முடிவு உள்ளது.
இந்நிலையில், திருமாவளவன் எப்போதுதான் ஆதரவு குறித்து அறவித்து கடிதம் வழங்குவார் என்று தவெகவினர் மட்டும் அல்ல தமிழகமே காத்துக்கொண்டிருக்கிறது.
இந்த சூழலில், சமூக வலைத்தளங்களில் "இது திருமாவின் காலம்" என விசிக தொண்டர்கள் உற்சாகமாக பதிவிட்டு டிரெண்டு செய்து வருகின்றனர்.
முன்னதாக,"ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு.. இது திருமா காலம்-இனி உயர்வோம் மேலும் மேலும்!" என வன்னி அரசு கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.