2026 சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, அமமுக மற்றும் பாமக ஆகிய கட்சிகள் பிரதான அங்கங்களாக உள்ளன.
இந்நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
தொடர்ந்து தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, பாஜகவிற்கு 27, அமமுக 11, அன்புமணி தரப்பிலான பாமகவிற்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கடந்தமுறையைவிட இந்தமுறை பாஜகவிற்கு 7 தொகுதிகள் அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்தமுறை பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் இம்முறை 5 தொகுதிகள் குறைக்கப்பட்டுள்ளன. மற்ற கட்சிகளுக்கு ஒரீரு தொகுதிகள் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொகுதிப் பங்கீடு அறிவிப்புக்கு பின்னர் கூட்டணித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. இன்று இரவுக்குள் மற்ற கட்சிகளுக்கான எண்ணிக்கையும் அறிவிக்கப்படும். திமுக கூட்டணி தலைவர்கள் வேண்டுமென்றே எங்களை விம்ரசிக்கிறார்கள். இந்தக் கூட்டணி வெற்றிக் கூட்டணி. 210 இடங்களில் நிச்சயம் வெல்லும். அதிமுக அதிக இடங்களில் வெற்றிப்பெறும்.
டெல்லிக்கு சென்றால் திட்டமிட்டு அவதூறு பரப்புகின்றனர். கருத்து பரிமாற்றத்திற்காக டெல்லி செல்கிறோம். 20 நாட்களாக காங்கிரஸ் - திமுக இடையே வார்த்தைபோர் நடந்துவருகிறது. இணக்கமான சூழலில்தான் எங்கள் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் 5 சீட்டுகளுக்கு திருமாவளவன் அலையோ அலை என அலைகிறார். கம்யூனிஸ்ட் கட்சிக்கு இன்னும் சீட் ஒதுக்கப்படவில்லை’ என தெரிவித்தார்.