மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய வரி விதிப்புகள், சட்ட மாற்றங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. 2025 வருமான வரி சட்டத்தின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த புதிய விதிகள், ஊதியம் பெறும் வரி செலுத்துவோர் அறிந்திருக்க வேண்டிய பல மாற்றங்களை கொண்டு உள்ளன.
1961-ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்த பழைய வருமான வரி சட்டம் நீக்கப்பட்டு எளிமையான வருமான வரி சட்டம் 2025 இன்று முதல் அமலுக்கு வந்தது. இனி முந்தைய ஆண்டு, மதிப்பீட்டு ஆண்டு என்ற குழப்பங்கள் இல்லாமல் ஒரே வரி ஆண்டு என அழைக்கப்படும்.
புதிய நிதியாண்டு 2026-27-ல், ஊதியம் பெறும் வரி செலுத்துவோர் அறிந்திருக்க வேண்டிய முக்கிய மாற்றங்கள் வரி திட்ட தேர்விலும், சேமிப்புகளிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.
புதிய மற்றும் பழைய வருமான வரி திட்டங்களின் கீழ், வருமான வரி அடுக்குகள் மற்றும் வருமான வரி விகிதங்கள் மாறாமல் உள்ளன. பழைய வரி திட்டம், பல பிடித்தங்கள் மற்றும் விலக்குகளை வழங்குகிறது. ஆனால் குறைந்த வருமான நிலைக ளில் அதிக வரி விகிதங்களை கொண்டுள்ளது. புதிய வரி திட்டம், மிகக் குறைவான விலக்குகளை கொண்டிருந்தாலும், அதிக வருமான நிலைகளில் குறைந்த வரி விகிதங்களை கொண்டு உள்ளது.
60 வயதுக்குட்பட்ட தனி நபர்களுக்கான பழைய வரி திட்டத்தில் ரூ.2.5 லட்சம் வரை வரி இல்லை, ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை 5 சதவீதம் வரி, ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 20 சதவீதம் வரி, ரூ.10 லட்சத்திற்கு மேல் 30 சதவீதம் வரி உள்ளது.
புதிய வரி திட்டத்தில் ரூ.4 லட்சம் வரை வரி இல்லை, ரூ.4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை 5 சதவீதம் வரி, ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை 10 சதவீதம் வரி, ரூ.12 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை 15 சதவீதம் வரி, ரூ.16 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை 20 சதவீதம் வரி, ரூ.20 லட்சம் முதல் ரூ.24 லட்சம் வரை 25 சதவீதம் வரி, ரூ.24 லட்சத்திற்கு மேல் 30 சத வீதம் வரி ஆகியவற்றில் வரி விகிதங்கள் அப்படியே உள்ளன.
வாடகை வீட்டில் வசிப்பவர்கள் 50 சதவீதம் எச்.ஆர்.ஏ. சலுகை பெற இதுவரை சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகியவை மட்டுமே மெட்ரோ நகரங்களாக இருந்தன. இனி பெங்களூர், ஐதராபாத், புனே, அகமதாபாத் நகரங்களும் இந்த பட்டியலில் சேருகின்றன. இதனால் அங்குள்ள ஊழியர்களுக்கு வரி மிச்சமாகும்.
கல்வி உதவித்தொகை ஒரு குழந்தைக்கு மாதம் ரூ.100-ல் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்ந்துள்ளது. விடுதி செலவு மாதம் ரூ.300-ல் இருந்து ரூ.9 ஆயிரமாக உயர்ந்துள்ளது. 2 குழந்தைகள் வரை இந்த சலுகையை பெறலாம்.
சிறு முதலீடுகள் மற்றும் ஓட்டல் பில்களுக்கு பான்கார்டு காட்டும் கட்டாயம் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆதாருடன் பான்கார்டை இணைக்காதவர்களுக்கு அபராதம் மற்றும் பான்கார்டு முடக்கம் போன்ற நடவடிக்கைகள் இனி மிக கடுமையாக இருக்கும்.
நிறுவனம் மூலம் கார் மற்றும் ஓட்டுநர் வசதி பெறும் ஊழியர்களுக்கான ‘சலுகை மதிப்பு’ உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு செலுத்த வேண்டிய வரிப்பொறுப்பு சற்று அதிகரிக்கும்.
முன்பு 2025-26 நிதியாண்டுக்கு 2026-27 மதிப்பீட்டு ஆண்டு என 2 ஆண்டுகளை குறிப்பிட வேண்டும். இனி அப்படி தேவையில்லை. எந்த ஆண்டில் வருமானம் ஈட்டுகிறீர்களோ, அதே ஆண்டை ‘வரி ஆண்டு 2026-27’ என குறிப்பிட்டால் போதுமானது.
நிறுவனங்கள் வழங்கும் ஒரு வேளை உணவுக்கான வரி விலக்கு வரம்பு ரூ.50-ல் இருந்து ரூ.200 ஆக 4 மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது.
நிறுவனங்களிடம் இருந்து வரி இல்லாமல் பெறப்படும் கடனுக்கான வரம்பு ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.2 லட்சமாக அதிகரித்துள்ளது. படிவம் 16 இனி கிடையாது, அதற்கு பதிலாக படிவம் 130 பயன்படுத்தப்படும்.
வரி தாக்கலில் தவறு இருந்தால், அதை திருத்தி தாக்கல் செய்ய டிசம்பர் 31 வரை மட்டுமே அவகாசம் இருந்தது. இனி ஒரு சிறிய கட்டணத்துடன் அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை திருத்தம் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வரும் ஜூலைக்குள் தாக்கல் செய்யப்படும் 2025-26 நிதியாண்டுக்கான கணக்குகள் பழைய சட்டத்தின்படியே கையாளப்படும். ஜூன் முதல் செலுத்தப்படும் முன்பண வரி புதிய சட்டத்தின்கீழ் அமையும்.
செபி ஆய்வின்படி, கடந்த 2024-25 நிதியாண்டில் மட்டும் எப் மற்றும் ஓ வர்த்தகத்தில் சிறு முதலீட்டாளர்கள் ரூ.1.05 லட்சம் கோடி நஷ்டத்தை சந்தித்தனர். இதை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்த வர்த்தகம் மீதான பரிவர்த்தனை வரி உயர்த்தப்பட்டுள்ளது.
நடுத்தர வர்க்கத்தினருக்கு பயன் தரும் வகையில், வெளிநாட்டு சுற்றுலா மற்றும் மருத்துவ, கல்வி தேவைக்காக அனுப்பப்படும் இதர பண பரிமாற்றங்க ளுக்கான டி.சி.எஸ். வரி 2 சதவீதமாக கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.
தரவு மையங்கள் துறையில் நாட்டை உலகளாவிய தலை மையாக மாற்றும் நோக்கில், இந்தியாவில் தரவு மைய சேவைகளை பெறும் அல்லது சொந்தமாக தரவு மையங்களை அமைக்கும் வெளிநாட்டு நிறுவனங்க ளுக்கு 2047-ம் ஆண்டு வரை 20 ஆண்டு காலத்துக்கு வரி விலக்கு அறிவிக்கப்படுகிறது.
மென்பொருள் ஏற்றுமதி மற்றும் ஐ.டி. நிறுவனங்களுக்கான ‘சேப் ஹார்பர்’ வரம்பு ரூ.300 கோடியில் இருந்து ரூ.2 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.