தமிழக செய்திகள்

முகக்கவசம் அணிந்து அதிரடி காட்டிய அமைச்சர்- திருச்செந்தூர் கோவிலில் நடந்தது என்ன?- முழு விவரம்

அமைச்சர் ரமேஷ் அன்னதானக்கூடத்தில் பக்தர்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டார்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.

திருச்செந்தூர் கோவில்

கந்தசஷ்டி மட்டுமல்லாமல் திருச்செந்தூர் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

திருவிழா மற்றும் சில முக்கிய தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பொது தரிசனம், ரூ.100 கட்டண தரிசனம் என பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்கிறார்கள்.

குற்றச்சாட்டு

சமீபகாலமாக கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் விரைவாக தரிசனம் செய்ய வேண்டுமென்றால் சில அர்ச்சகர்கள் லஞ்சமாக பணம் பெற்றுக்கொண்டு தரிசனத்துக்கு அனுமதிப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன.

இந்தநிலையில் நேற்று அதிகாலையில் வழக்கம்போல் கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. பக்தர்களும் நீண்ட வரிசையில் தரிசனத்துக்காக காத்திருந்தனர்.

அப்போது முகக்கவசம் அணிந்திருந்த நபர் உள்பட 4 பேர் கோவில் சண்முக விலாச மண்டபம் பகுதியில் நின்று கொண்டிருந்த அர்ச்சகர் அய்யப்பனிடம் சென்று பேசினர்.

அவர்களில் ஒருவர் கூறுகையில்,'நாங்கள் 4 பேர் வெளியூரில் இருந்து வந்துள்ளோம். நாங்கள் விரைவாக கோவிலுக்கு சென்று சிறப்பு தரிசனம் செய்ய வேண்டும்' என்றார்.

லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்

அப்போது அவர்களிடம், 'சிறப்பு தரிசனம் செய்வதற்கு ஒரு நபருக்கு ஆயிரம் ரூபாய் வீதம் 4 பேருக்கு ரூ.4 ஆயிரம் தரவேண்டும்' என்று அர்ச்சகர் கேட்டுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த நபர், பின்னர் தன்னுடைய செல்போனில் 'ஜி-பே' மூலம் அர்ச்சகருக்கு பணம் அனுப்பினார். பின்னர் முகக்கவசம் அணிந்திருந்தவர் தவிர மற்ற 3 பேரும் சாமி தரிசனம் செய்ய அர்ச்சகருடன் சென்றனர். அங்கிருந்த கோவில் காவலாளிகள் கருப்பசாமி, தோப்பு ஆகியோர் அர்ச்சகர் கூறியதும் 3 பேரையும் கோவிலுக்குள் அனுமதித்தனர்.

முகக்கவசம் அணிந்து வந்தவர் அமைச்சர்

தொடர்ந்து 4 பேரில் ஒருவராக முகக்கவசம் அணிந்து நின்று கொண்டிருந்த நபர் கோவில் அன்னதானக்கூடத்துக்கு சென்று ஆய்வு செய்தார். அங்கு அவர் தனது முகக்கவசத்தை கழற்றியபோது அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

அதாவது, முகக்கவசம் அணிந்துகொண்டு சாதாரண உடையில் ரகசியமாக வந்திருந்தவர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் என்பதும், அவருடன் வந்தவர்கள் அவரது உதவியாளர்கள் எனவும் தெரியவந்தது. அமைச்சர் ரமேஷ் அன்னதானக்கூடத்தில் பக்தர்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டார்.

பணம் கேட்ட ஊழியர்கள்

தொடர்ந்து அமைச்சர், பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தும் இடத்துக்கு சென்றார். அங்கிருந்த ஊழியர்கள் சங்கர், நாகராஜன் ஆகியோர் முடி காணிக்கை செலுத்த வந்த பக்தர்களிடம் பணம் கேட்டது தெரியவந்தது.

கோவிலுக்கு ரகசியமாக வந்தது அமைச்சர் ரமேஷ் என்பதை அறிந்ததும் அமைச்சரிடமே லஞ்சம் கேட்ட அர்ச்சகர் மற்றும் காவலாளிகள், ஊழியர்கள் ஒரு நிமிடம் அப்படியே உறைந்து போனார்கள். அவர்கள் 5 பேரிடமும் விளக்கம் கேட்டு நடவ டிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

பேட்டி

இதையடுத்து அவர் கோவில் அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டமும் நடத்தினார். அறநிலையத்துறை அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு கோப்புகளையும் ஆய்வு செய்தார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கோவில் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்கள், கடற்கரை போன்றவற்றை நேரில் பார்யிட்டார்.

அங்கு அமைச்சர் ரமேஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பாரபட்சமின்றி நடவடிக்கை

திருச்செந்தூர் கோவிலில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக பக்தர்கள், சமூக ஆர்வலர்கள், சமூக வலைதளங்களில் இருந்து பல புகார்கள் வந்துள்ளன.

இதையடுத்து திடீர் ஆய்வு மேற்கொண்டேன். நான் முகக்கவசம் அணிந்து வந்து ஆய்வு செய்தேன். அப்போது தெற்கு கோபுர முகப்பு பகுதியில் பக்தர்களிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு நேரடியாக தரிசனத்துக்கு அழைத்து செல்வதை கண்டுபிடித்துள்ளோம்.

அர்ச்சகர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் சேர்ந்துதான் இந்த முறைகேட்டில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் யாராக இருந்தாலும், எந்த பாகுபாடும். பாரபட்சமும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆனால், அவர்களிடம் மன்னிப்பு கடிதம் வாங்கிக்கொண்டு மன்னித்து விட்டுவிட்டது போல சமூகவலைதளங்களில் தவறான தக வல் பரப்பப்பட்டுள்ளது.

விளக்கம் கேட்டு கடிதம்

அவர்களிடம் மன்னிப்பு கடிதம் எதுவும் வாங்கவில்லை. விளக்க கடிதம்தான் பெறப்பட்டுள்ளது. ஒரு புகார் வந்தால் சம்பந்தப் பட்டவர்களிடம் விளக்கம் கேட்டு கடிதம் பெறுவது ஒரு நடைமுறை.

கோவில் சொத்துக்கள், கோவிலுக்கு வரவேண்டிய வருமானங்கள் எங்கெல்லாம் தடைபட்டுள்ளது. கோவிலுக்கு தேவையான அடிப்படை வசதிகள், கோவில் தூய்மையை எவ்வாறு கடைபிடிப்பது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் விரைவாக தரிசனம் முடித் துவிட்டு செல்வதற்காக என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்தும் விரிவாக ஆய்வு செய்துள்ளோம்.

நடவடிக்கை

இந்த ஆய்வுகளின் அடிப்படையில் உண்மையிலேயே குற்றம் செய்த யாராக இருந்தாலும் எந்த பாரபட்சமும் இல்லாமல், எந்த தயக்கமும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த ஆய்வு அறிக்கை முதல்-அமைச்சரிடம் அளிக்கப்பட்டு யாராக இருந்தாலும் தவறு செய்தால் நிச்சயம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பணி இடைநீக்கம்

இதற்கிடையே அமைச்சரிடம் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் சிக்கிய அர்ச்சகர் அய்யப்பன், கோவில் காவலாளிகள் கருப்ப சாமி, தோப்பு, முடிக்காணிக்கை கூட ஊழியர்கள் சங்கர், நாகராஜன் ஆகியோர் முதற்கட்ட நடவடிக்கையாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை கோவில் நிர்வாகம் அதிரடியாக பிறப்பித்துள்ளது.