தமிழக செய்திகள்

வெப்பம் தணிந்தது..! சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

சென்னையில் பலத்த காற்று, இடியுடன் கூடிய பரவலாக கனமழை பெய்து வருகிறது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதன் காரணமாக மக்கள் வெளியே செல்வதை குறைத்துக் கொண்டனர். குறிப்பாக மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை சாலைகள் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டன.

இதனிடையே, தென்தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விருதுநகர், தேனி, மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதற்கேற்றார் போல் ஆங்காங்கே திடீரென கருமேகங்கள் சூழ்வதும், அவ்வப்போது தூறல்கள் போடுவதுமாக இருந்து வந்தது.

இந்நிலையில், சென்னையில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

அந்த வகையில், சுட்டெரிக்கும் கோடை வெயிலை தணிக்கும் வகையில் சென்னையில் பலத்த காற்று, இடியுடன் கூடிய பரவலாக கனமழை பெய்து வருகிறது.

சென்னை எழும்பூர், கீழ்ப்பாக்கம், சேத்துபட்டு, நுங்கம்பாக்கம், புதுப்பேட்டை, ஆயிரம் விளக்கு, ராயப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.