தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. அந்தவகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாவட்டவாரியாக அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில், இன்று திருச்செங்கோடு பகுதிக்கு அடுத்தப்படியாக கரூர் பேருந்து நிலையம் அருகே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்,
“எதிரி நம்மை சற்று பலவீனமாக நினைக்கிறார், அவர் யார் என்று உங்களுக்குத் தெரியும். அவர் பலவீனப்பட்டு ஊரை விட்டு, மாவட்டத்தை விட்டே ஓடிப்போய்விட்டார். இந்த மாவட்டத்தில் அதிமுக மட்டுமே நான்கு தொகுதியிலும் போட்டியிடுகிறது.
மற்ற மாவட்டங்களில் ஒரு தொகுதியாவது கூட்டணிக்குக் கொடுத்திருப்போம், ஆனால் இங்கு எதிரிகளை வீழ்த்துவதற்கு அதிமுகவின் முழு பலத்தையும் பயன்படுத்துவதற்கு தனியாகப் போட்டியிடுகிறது. அதிமுக மக்களை நம்பி நிற்கிறது, திமுகவோ கூட்டணியை நம்பி இருக்கிறது.
திமுக தலைமையிலான கூட்டணி வலிமையானது என்று ஸ்டாலின் சொல்கிறாரே ஒழிய திமுக வலிமையானது என்று சொல்லவில்லை. இந்த மாவட்டத்தில் எப்படியெல்லாம் அதிமுகவினரை பழி வாங்கினார்கள் என்று தெரியும், ஆட்சி மாறினால் காட்சியும் மாறும்.
கரூர் மாவட்டத்தில் மட்டும் ஐந்தாண்டுகளில் பிசிஆர் வழக்கு, மணல் வழக்கு, போதை மாத்திரை பொய் வழக்கு என்று நிறைய போட்டிருக்கிறீர்கள், இதெல்லாம் அதிமுக அரசு விசாரித்து, பொய் வழக்கு போட்ட அதிகாரிகள் எல்லாம் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். அப்போது இருந்த பழனிசாமி வேறு, இப்போது இருக்கும் பழனிசாமி வேறு.” என தெரிவித்தார்.