தமிழக செய்திகள்

‘ஊழலின் ஊற்றுக்கண் திமுக... இரண்டையும் பிரித்துப் பார்க்க முடியாது’ - இபிஎஸ் விமர்சனம்

ஊழலையும், திமுகவையும் பிரித்து பார்க்கமுடியாது என இபிஎஸ் விமர்சித்துள்ளார்.

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசி தொகுதி அதிமுக வேட்பாளர் கே.டி. ராஜேந்திர பாலாஜியை ஆதரித்து அங்கு வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர்,

அதிமுக மீண்டும் ஆட்சி அமைத்தால் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால் தீப்பெட்டி, பட்டாசு தொழில்கள் பாதுகாக்கப்படும். காவிரி குண்டாறு திட்டம், மேட்டூர் அணை உபரி நீரை கால்வாய் வெட்டி ஏரிகள் குளங்கள் நிரப்பி, வேளாண்மைக்கு தேவையான நீர் கொடுக்கும் திட்டம் நிறைவேற்றப்படும்.

சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிது. சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பில்லை. இப்படிப்பட்ட கேவலமான ஆட்சி தொடர வேண்டுமா? நிரந்தர டிஜிபி நியமிக்க முடியாத பொம்மை முதல்வர் ஆள்கிறார். சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தால்தான் நாடு சிறப்படையும். பலமுறை நான் பேசிவிட்டேன் ஆனால் நிரந்தர டிஜிபி நியமிக்கவில்லை. நீதிமன்றம் போனோம், நீதிமன்றம் உத்தரவிட்டும் நியமிக்கவில்லை.

எங்கே பார்த்தாலும் போதைப் பொருள். மாத்திரை, சாக்லேட், திரவம் என பல ரூபத்தில் கஞ்சா வருகிறது. மாணவர்கள், இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலமுறை நான் பேசிவிட்டேன் ஆனால் கண்டுகொள்ளவில்லை. இதை தடுத்து நிறுத்த அதிமுக ஆட்சி மலர வேண்டும்.

மூன்றே மாதத்தில் கஞ்சா முழுவதும் தமிழ்நாட்டில் ஒடுக்கப்படும் அதிமுக ஆட்சியில். கஞ்சா விற்பதே ஆளுங்கட்சிக்கு துணை நிற்பவர்கள் தான். போதை ஆசாமிகளால் போலீசுக்கே பாதுகாப்பில்லை. ஆளும் பொறுப்பில் இருப்பவர்கள் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கத் தவறியதுதான் இதற்குக் காரணம். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் இது.

திமுக 525 வாக்குறுதிகள் கொடுத்தது. அதில் நான்கில் ஒரு பங்கு கூட நிறைவேற்றவில்லை. இப்போது மீண்டும் அறிவிப்பு கொடுத்திருக்கிறார். மின் கட்டணம் உயர்ந்துவிட்டது. நகராட்சி நிர்வாகத்துறையில் ஊழல் நடந்ததாக எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்ய அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியது, அதிமுக நீதிமன்றம் போனது, அதை விசாரித்த நீதிமன்றமும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யச் சொன்னது. ஆனால் செய்யவில்லை.

1000 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல், மீண்டும் அதிமுக ஆட்சி மலரும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோவில் சொன்னார். உதயநிதியும், சபரீசனும் 30 ஆயிரம் கோடி வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கிறார்கள் என்றார்.

இரண்டே ஆண்டில் 30 ஆயிரம் கோடி என்றால், இந்த 5 ஆண்டில் எவ்வளவு கொள்ளை அடித்திருப்பார்கள்? ஊழல் நிறைந்த ஆட்சி தொடர வேண்டுமா?

திமுக ஆட்சி சூப்பர் ஆட்சியாம், எதில்..? ஊழல் செய்வதில் நம்பர் ஒன். டாஸ்மாக்கில் ஊழல், பல துறைகளில் ஊழல். இந்தியாவில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு திமுக அரசுதான். ஊழலின் ஊற்றுக்கண் திமுக. இரண்டையும் பிரித்துப் பார்க்க முடியாது.

கடன் வாங்குவதற்கு கவலைப்படுவதில்லை, 5 லட்சம் கோடி கடன் வாங்கிவிட்டார், நாம் தான் கட்டணும். உங்கள் தலையில் தான் சுமத்தப்பட்டுள்ளது. 73 ஆண்டுகால தமிழக ஆட்சி வரலாற்றில் எத்தனையோ அரசுகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன.

2021ம் ஆண்டு வரை ஒட்டுமொத்தமாக இருந்த கடன் 4 லட்சத்து 85 ஆயிரம் கோடி, ஆனால் அதைவிட திமுகவின் இந்த ஐந்தாண்டுகளில் 5 லட்சம் கோடி கடன் வாங்கி நம் எல்லோரையும் கடனாளியாக்கிவிட்டார். வரி போட்டுத்தான் இந்த கடனை அடைப்பார்கள்.

திமுக ஆட்சியின் வரிச்சுமையால் பாதிக்கப்பட்ட மக்களின் துன்பத்தை களைய உதவித்தொகை 10 ஆயிரம் ரூபாய் வங்கியில் செலுத்தப்படும். திமுக ஆட்சியில் உரிமைத் தொகை உடனே கொடுக்கவில்லை, 28 மாதம் கழித்து, அதுவும் அதிமுகவின் அழுத்தம் காரணமாகவே கொடுத்தனர். தானாகக் கொடுக்கவில்லை. அதிமுக ஆட்சிக்கு வந்தால், எல்லா குடும்ப தலைவிக்கும் மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

பெண்களைப் போல இனி ஆண்களும் நகரப் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம். தீபாவளி தோறும் பெண்களுக்கு பட்டுச்சேலை வழங்கப்படும். ஆட்டோ ஓட்டுநர்களின் கோரிக்கைக்கு இணங்க, ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தில் பதிவு செய்தவர்களுக்கு ஆட்டோ வாங்குவதற்கு 75 ஆயிரம் ரூபாய் மானியம் கொடுக்கப்படும்.

பட்டப்படிப்பு படித்து பதிவுசெய்த இளைஞர்களுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய், +2 வரை படித்தவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். நகரப்பகுதியில் சாலையோர வியாபாரிகள் வாங்கிய கூட்டுறவு வங்கிக் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். புதிதாக 2 லட்சம் ரூபாய் வரை எந்தவித ஜாமீனும் இல்லாமல் கடன் வழங்கப்படும். மாற்றுத் திறனாளிகள் கூட்டுறவு சங்கத்தில் வாங்கிய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். அரிசியோடு இனி பருப்பு, எண்ணெய் விலையில்லாமல் வழங்கப்படும். 125 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும்.

சிவகாசி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தியது அதிமுக ஆட்சி. சாலை, பாலம் என பல திட்டம் கொடுத்தோம். மீண்டும் அதிமுக அரசு மலர நீங்கள் அனைவரும் ஆதரவு நல்க வேண்டும். அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்திலும், கூட்டணிக் கட்சியினருக்கு அவர்களின் சின்னத்திலும் வாக்களித்து வெற்றி பெறவையுங்கள். ” என தெரிவித்தார்.