தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே கடந்த திமுக ஆட்சியின்மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் பள்ளிக்கல்வித்துறையில் பெருமளவு லஞ்சம் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. தடையில்லா சான்றிதழ் உள்ளிட்ட பல சான்றிதழ்களை பெற பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் நிறைய லஞ்சம் வழங்க வேண்டியிருந்ததாக பல கல்வி நிறுவனங்ளின் நிறுவனர்கள் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய நிதித்துறை அமைச்சர், இதற்கு தான்கூட ஒரு சாட்சி என்றும், தானும் லஞ்சம் கொடுக்க நிர்பந்திக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இந்நிலையில் அமைச்சர் மரிய வில்சனின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ளார் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது;
“அமைச்சர் மரிய வில்சன் லஞ்சம் கொடுத்தேன் என்றுக்கூறுவதே முதலில் தவறு. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புக்கூட இதுபோன்ற ஒரு குற்றச்சாட்டு என்மீது முன்வைக்கப்பட்டது. அவர்களிடம் ரூ.50 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு போட்டேன். பொய் குற்றச்சாட்டுகளை அடுக்கிய அவரிடமும் இன்று விசாரணை நடைபெற்று வருகிறது.
அதனடிப்படையில் இன்று அமைச்சர் பேசினாரா எனத் தெரியவில்லை. ஒரு அமைச்சர் லஞ்சம் கொடுத்தேன் என்றுக்கூறுவதே தவறு.
முதலில் அவரிடம் விசாரணை நடத்தவேண்டும். லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரிடம் கண்டிப்பாக இதுகுறித்து புகாரளித்து, உடனடியாக அமைச்சரை அழைத்து விசாரிக்கவேண்டும். அவர்கள் செய்வது அனைத்தும் மடைமாற்றம்.” என தெரிவித்துள்ளார்.
தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் வாங்கப்பட்டதாக தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் அலுவலகப் பொறுப்பாளர் நந்தகுமார் குற்றம் சாட்டியிருந்தார். இதில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெயரையும் இணைத்துப் பேசியிருந்தார்.
இதனால் அவருக்கு நோட்டீஸ் அனுப்பிய அன்பில் மகேஷ், தன்மீதான அவதூறு பேச்சுக்கு 48 மணிநேரத்தில் நந்தகுமார் பகிரங்க மன்னிப்புக் கேட்கவேண்டும் என்றும், அவதூறுக்காக ரூ.50 கோடி இழப்பீடு வழங்கவேண்டும் என்றும், இல்லையென்றால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார்.