திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட 2000 ஏக்கர் நெற்பயிர்களுக்கு தமிழ்நாடு அரசு இழப்பீடு தரவேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
கடந்த இரண்டு நாட்களாக திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பெய்த திடீர் மழையினால் சுமார் 2000 ஏக்கர் நிலத்தில் விளைவித்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன.
விவசாயத்திற்கு ஆதாரம் தண்ணீர். தண்ணீருக்கு மழைதான் ஆதாரம்! கடந்த இரண்டு நாட்களாக டெல்டா மாவட்டங்களில் சில இடங்களில் பெய்த கன மழை, சுமார் 2000 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்த விவசாயிகளின் வாழ்வை அடியோடு புரட்டிப்போட்டுள்ளது.
கன மழையால் அறுவடைக்குத் தயாரான நெற்கதிர்கள் எதிர்பாராத மழையால் சேதமடைந்ததை எண்ணி அப்பகுதி விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள். இவர்களின் கண்ணீரைத் துடைப்பது த.வெ.க. கூட்டணி அரசின் கடமையாகும்.
அடுத்த ஜென்மத்தில் விவசாயியாகப் பிறக்க கனவு காணும் பொய்க்கால் அரசின் முதலமைச்சர் ஜோசப் விஜய், இந்த ஜென்மத்தில் அல்லலுறும் விவசாயிகளைக் காக்கும் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.
இந்த அரசு ஜூன் 12-ல், குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடாத நிலையில், நிலத்தடி நீரை நம்பி கடன் வாங்கி வேளாண் பயிர் செய்திருந்த விவசாயிகள், தற்போது கதிர்கள் முற்றி அறுவடைக்குத் தயாராக இருக்கும் நேரத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த திடீர் மழையினால், பாடுபட்டு விளைவித்திருந்த நெற்கதிர்கள் மழையில் மூழ்கிய நிலையைப் பார்த்து விவசாயிகள் கடும் வேதனையில் உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே, த.வெ.க. தேர்தல் நேரத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய வேளாண் கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்த பிறகு, தவணை முறையில் சிறிது, சிறிதாக வேளாண் கடனை தள்ளுபடி செய்யும் அறிவிப்புகளை வெளியிடும் த.வெ.க. அரசின் முதலமைச்சரின் செய்கைகளைக் கண்டு விவசாயிகள் கொதித்துப்போய் உள்ளனர்.
தற்போது பெய்த கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு கைக் கொடுக்க இந்த அரசு முன்வர வேண்டும். தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறை மற்றும் வேளாண் துறை அதிகாரிகளை உடனடியாக மழையால் பாதிக்கப்பட்ட திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு அனுப்பி, பயிர் சேத விவரங்களை முழுமையாக கணக்கெடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் அனைவருக்கும் ஏக்கர் ஒன்றுக்கு 30,000 ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று பொய்க்கால் த.வெ.க. அரசை வலியுறுத்துகிறேன்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.