தமிழக செய்திகள்

மணிக்கு ஒருமுறை போன் செய்து நடவடிக்கை குறித்து கேட்டறியும் முதலமைச்சர்..!- அமைச்சர் ஆனந்த்

அதிகாரிகளை உடனே அழைத்து பேசி மழை நீரை அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

சென்னையில் நேற்று இரவு 7 மணி முதல் விட்டு விட்டு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.

தி.நகர் பகுதியில் பனகல் பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது.

அமைச்சர் என்.ஆனந்த் ஆய்வு

தி.நகர் தொகுதியில் உள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கிய பகுதிகளை அமைச்சர் என்.ஆனந்த் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மழை வெள்ளத்தை அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தி.நகர் பகுதியில் உள்ள பல்வேறு சாலைகளில் அவரே மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்று வெள்ளம் தேங்கி கிடப்பதை ஆய்வு செய்து அதனை அப்புறப்படுத்தும் பணிகளை மேற்கொண்டார்.

மரத்தை அப்புறப்படுத்த நடவடிக்கை

தி.நகர் பேருந்து நிலையத்தின் பின்புறம் மழை காரணமாக மரம் முறிந்து விழுந்தது. இதனால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அமைச்சர் என்.ஆனந்த் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டார். அதிகாரிகளை அழைத்து மரத்தை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.

பின்னர் அமைச்சர் என்.ஆனந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதலமைச்சர் விஜய் உத்தரவின் பேரில் சென்னையில் தேங்கும் வெள்ளத்தை அப்புறப்படுத்த உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அதிகாரிகளை உடனே அழைத்து பேசி மழை நீரை அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

பள்ளமான பகுதி

மழையால் மக்களுக்கு பிரச்சினைகள் இல்லாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டு வருகிறது. தி.நகர் பள்ளமான பகுதி என்பதால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது.

இதையடுத்து மோட்டார்கள் மூலம் தண்ணீர் உடனுக்குடன் அகற்றப்பட்டு வருகிறது. தண்ணீரை அகற்ற அதிகாரிகள் துரிதமாக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

சென்னையில் எவ்வளவு மழை பெய்தாலும் பொதுமக்கள் பாதிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் 2 ஆயிரம் பேருக்கு இன்று, காலை உணவு ஏற்பாடு செய்து கொடுத்து உள்ளோம். மதியம் சாப்பாடு கொடுக்கவும் ஏற்பாடு செய்து வருகிறோம்.

மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் இருக்க அதிகாரிகள் நல்ல முறையில் ஒத்துழைப்பு தருகிறார்கள்.

மூன்று மாதங்களாகவே முதல்வரின் உத்தரவின்படி ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கடந்த காலங்களில் 4, 5 நாட்கள் வரை மழைநீர் தேங்கி நின்ற நிலையில், தற்போது 4, 5 மணி நேரங்களிலேயே தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களை முதல்வர் விஜய் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டு, நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து வருகிறார். மேலும், பொறுப்பு அமைச்சர்கள் பணிகளை விரைந்து முடிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT