தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி தவெக தலைவர் விஜய் இன்று பெரம்பூரில் வேட்புமனு தாக்கல் செய்தார். தொடர்ந்து தனது தேர்தல் பிரச்சாரத்தையும் பெரம்பூரில் துவங்கினார். அதனைத்தொடர்ந்து கொளத்தூரிலும் விஜய் தனது பரப்புரையை செய்தார். ஆனால் வில்லிவாக்கம் தொகுதியில் விஜய்யின் பரப்புரை ரத்து செய்யப்பட்டது.
இதனால் வில்லிவாக்கம் தொகுதியில் விஜய்யின் பரப்புரையை காண காத்திருந்த ஆதரவாளர்கள் அதிருப்தியடைந்தனர். இந்நிலையில் இதுகுறித்து தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
“மற்றொரு கரூர் சம்பவம் நடந்துவிடக்கூடாது என தேர்தல் அதிகாரியை கேட்டுக் கொள்கிறோம். கொளத்தூரில் பேசுவதற்கே தலைவருக்கு மனம் வரவில்லை. ஏனெனில் அவ்வளவு மக்கள் அலை. கொளத்தூரில் மீண்டும் ஒரு கரூர் சம்பவம் நடக்கவேண்டும் என முதலமைச்சர் நினைத்தார். அதனால்தான் வண்டியை திருப்பிவிட்டோம்.
மு.க.ஸ்டாலினுக்கு ஏன் இந்தப் பயம்? வில்லிவாக்கத்தில் இன்று காவல்துறை சிறப்பாக பாதுகாப்பு கொடுத்திருந்தனர். ஆனால் கொளத்தூரில் அதுபோன்று இல்லை. பெரம்பூர் போல ஏன் கொளத்தூரில் காவல்துறை செயல்படவில்லை.
ஏனெனில் நாங்கள் இன்னும் இரண்டுமுறை அங்கு பிரச்சாரம் செய்தால் தோற்றுவிடுவோம் என முதலமைச்சருக்கு பயம். காவல்துறையையும், அரசு இயந்திரத்தையும் கடந்த 8 மாதங்களாக எங்களுக்கு எதிராக முதலமைச்சர் பயன்படுத்திக் கொண்டுவருகிறார்.
கொளத்தூரில் இன்று ஏதேனும் இழப்பு ஏற்பட்டிருந்தால் அதற்கு யார் பதில் சொல்வது? நேர்மையான அதிகாரியைக் கொண்டு இந்த தேர்தலை நடத்தவேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை. நாங்கள் அரசியல் செய்யவில்லை. எங்களுக்கு எந்த இழப்பும் ஏற்படக்கூடாது. மக்களின் பாதுகாப்பை வைத்து திமுக விளையாடுகிறது.
மு.க.ஸ்டாலின் அமைதியாக இருப்பார். ஆனால் காவல்துறையையும், அதிகாரத்தையும் தவறாக பயன்படுத்துவார்.” என தெரிவித்தார்.