தமிழக செய்திகள்

‘கோவையை கைப்பற்ற பாஜக துடிக்கிறது’ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவையில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

தமிழ்நாடு 2026 தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 2) கோவையில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்,

“என்னைப்போல, பழனிசாமி ஆட்சியில் செய்யப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு சொல்லமுடியுமா? பத்தாண்டு காலாண்டு ஆட்சியில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினார்களா? இந்த லட்சணத்தில் அவர்களின் வாக்குறுதிகளை நாம் காப்பியடித்தாக வாய்கூசாமல் கூறுகிறார் பழனிசாமி.

அவர்தான் திமுகவின் திட்டங்களை காப்பியடித்து அறிக்கையாக வெளியிட்டுள்ளார். 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் பட்டியல் இட சாதனைகளோ, திட்டமோ எதுவும் அவரிடம் இல்லை. இந்த பிரச்சனை பழனிசாமியைவிட அவரது முதலாளி மோடிக்குதான் அதிகம்.

அவராலும் தமிழ்நாட்டிற்கு செய்த சிறப்பு திட்டம் என எதையும் சொல்லமுடியாது. பெரும்பாலும் வெளிநாடுகளிலேயே வாழும் மோடி தேர்தல் வந்துவிட்டால் தமிழ்நாட்டிற்கு வந்துவிடுகிறார்.

நாளை மறுநாள் கூட சென்னையில் ரோடுஷோ நடத்த வருகிறாராம். இதனால் யாருக்கு மகிழ்ச்சியோ இல்லையோ, எங்களுக்கு மகிழ்ச்சி. ஏனென்றால் 2024 நாடாளுமன்ற தேர்தலில் இதுபோலத்தான் ரோடு ஷோ செய்தார். அதனால் இப்போது அவர் வந்தால் நம்முடைய 200 தொகுதி இலக்கு உறுதியாகிவிடும்.

மோடியும், அமித்ஷாவும் எத்தனைமுறை வருகிறார்களோ அந்தளவு நமது வெற்றியின் அளவு கூடும். நமது பிரச்சார பீரங்கி ரவியை திடீரென அனுப்பிவிட்டார்கள். தமிழ்நாடு பாஜகவை ஏன் இந்தளவு வெறுக்கிறது? ஏனென்றால் தமிழை, தமிழரை, தமிழ்நாட்டை பாஜக வஞ்சிக்கிறது. இன்னும் வெளிப்படையாக சொன்னால் தமிழ்நாட்டை அவமானப்படுத்துகிறது.

பீகார் மக்கள் தமிழ்நாட்டில் துன்புறுத்தப்படுகிறார்கள் என பிரதமர் மோடி அங்கே தேர்தல் பரப்புரையில் பேசினார். அவர் வகிக்ககூடிய பதவிக்கு உகந்த பேச்சா இது? இதனை இப்போது வரும்போது சொல்வாரா?

தமிழ்நாட்டில் பல்வேறு இனம், மொழி, மாநிலங்களை சேர்ந்த மக்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். நிம்மதியாக இருக்கிறார்கள். வந்தாரை வாழவைக்கும் நம்மைபார்த்து அபாண்டமாக பழிப்போட்டவர்தான் மோடி.

தர்மேந்திர பிரதான் இதைவிட மோசமாக பேசினார். தமிழர்கள் நாகரீகமற்றவர்கள் என நாடாளுமன்றத்தில் பேசினார். நாம் கடும் எதிர்ப்பு தெரிவிக்க அங்கேயே மன்னிப்பு கேட்டார்.

கோவை மாவட்ட திமுக கூட்டணி வேட்பாளர்கள்

ஒடிசா தேர்தல் பரப்புரையில் தமிழர்களை பாஜகவினர் எப்படியெல்லாம் விளம்பரங்கள் மூலம் இழிவு செய்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். பூரி ஜெகநாதர் கோயில் கருவூலச் சாவி தமிழ்நாட்டுக்கு போய்விட்டது, என தமிழர்களை திருடர்களாக சித்தரித்தார்கள்.

குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுத்தனர். இதனால்தான் தமிழ்நாட்டில் உங்களுக்கு இடம் இல்லை என மக்கள் கூறுகிறார்கள்.

இதுபோலத்தான் தமிழ்நாட்டில் இருந்து வந்து கர்நாடகாவில் வெடிகுண்டு வைக்கிறார்கள் என ஒன்றிய அமைச்சர் சோபா பேசி, பிறகு பிரச்னை ஆனதும் மன்னிப்பு கேட்டார்.

மக்கள் தொகை போதாது என கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களை நிராகரித்துவிட்டு, ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுவதுபோல உ.பி.யின் ஆக்ரா நகரில் ஆளில்லாமல் மெட்ரோவை ஓட்டிக் கொண்டு இருக்கிறார்கள். இதுபோல பல நகரங்களில். தமிழ்நாட்டை பார்த்தால் பாஜகவிற்கு எப்படி தெரிகிறது? கோவையை கைப்பற்ற வேண்டும் என பாஜக துடிக்கிறது.

ஒன்றிய பட்ஜெட்டின்போது தமிழ்நாட்டை மொத்தமாக மறந்துவிடுவார்கள். இயற்கை பேரிடருக்கு நிவாரணம் தரும்போது தமிழ்நாடு நினைவுக்கு வராது. அதுபோலத்தான் தமிழ்நாடு மக்கள் வாக்குச்சாவடிக்கு செல்லும்போது பாஜக நினைவுக்கு வராது. இனியும் வரக்கூடாது.

நீங்கள் என்ன திட்டம்போட்டு என் மக்களுக்கான திட்டங்களை தடுத்தாலும், அவர்களுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் திட்டங்களை கொடுத்துக்கொண்டே இருப்பான்” என தெரிவித்தார்.