உச்சநீதிமன்றம் 
தமிழக செய்திகள்

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு - தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

மாணவி தந்தை முருகானந்தம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

மாலை மலர்

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவி விடுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.


பள்ளி நிர்வாகமும், விடுதி காப்பாளர்களும் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாகவும், இதனாலேயே விஷம் குடித்ததாகவும் மாணவி லாவண்யா கூறுவது போன்ற வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.  

குடும்ப சூழ்நிலையால் பள்ளிக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும், பள்ளி விடுதி காப்பாளர் தன்னை அதிக வேலை வாங்குவதாகவும் இதனால் படிப்பில் கனம் செலுத்த முடியாமல் குறைவான மதிப்பெண் எடுத்ததால் சரியாக படிக்க முடியாது என நினைத்து தான் விஷம் குடித்ததாகவும் மாணவி லாவண்யா கூறும் மற்றொரு வீடியோ வெளியானது.  

மதம் சார்பான பிரசாரங்கள் தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் செய்யப்படவில்லை. மாணவி லாவண்யா தற்கொலைக்கு கட்டாய மதமாற்ற துன்புறுத்தல் காரணம் கிடையாது என மாவட்ட கல்வி அலுவலர் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. 

இதற்கிடையில், தனது மகளின் மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மாணவியின் தந்தை முருகானந்தம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, மாணவி தற்கொலை வழக்கை கடந்த 31-ம் தேதி சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது. 

இந்த நிலையில் தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது. 

முன்னதாக மாணவி லாவண்யாவின் தந்தை முருகானந்தம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள  கேவியட் மனுவில், தனது மகள் லாவண்யாவின் தற்கொலை விவகாரம் தொடர்பாக யாரேனும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தால் தனது தரப்பையும் கேட்ட பிறகே எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்...மதத்தை கடைப்பிடிப்பதற்காக யாரும் பள்ளிக்கு வரக்கூடாது- கர்நாடக உள்துறை மந்திரி அறிவுறுத்தல்