தமிழக செய்திகள்

தளபதி ஸ்டாலின் தோற்றது 'அண்ணா'வே தோற்றது போல் உள்ளது - வைகோ உருக்கம்

அருபெறும் சாதனைகளை திட்டங்களாக அறிவித்து, ஒரு எடுத்துக்காட்டான அரசாங்கத்தை நடத்திய தலைவர் தளபதி ஸ்டாலின்

தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிட்ட திராவிட முன்னேற்ற கழகம் 73 தொகுதிகளை பெற்று தோல்வியை சந்தித்துள்ள நிலையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் வைகோ, முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்துள்ளார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த வைகோ, பெண்கள் மற்றும் பள்ளிக்குழந்தைகளை பாதுகாக்கும் வகையில், மு.க.ஸ்டாலின் அறிவித்த நலத்திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றுவது, தற்போது வெற்றி பெற்றுள்ள த.வெ.க கட்சியின் பொறுப்பு என்று கூறினார்.

திராவிட முன்னேற்ற கழகம் இந்த மண்ணில் தழைக்க அரும்பெரும் பாடுகள்பட்டு, கட்சியின் முன்னேற்றத்திற்காக பல தலைவர்கள் உழைத்துள்ளதாக வைகோ கூறினார்.

கடந்த 1962ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், 50 இடங்களில் திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெற்றபோது, காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்ட அண்ணா தோல்வி அடைந்ததால், அந்த வெற்றியை தாங்கள் கொண்டாடவில்லை என்று கூறினார்.

அதைப்போன்று அருபெறும் சாதனைகளை திட்டங்களாக அறிவித்து, ஒரு எடுத்துக்காட்டான அரசாங்கத்தை நடத்திய தலைவர் தளபதி ஸ்டாலின் வெற்றி பெறாதது, 1962ஆம் ஆண்டு தேர்தல் மனநிலையை ஏற்படுத்தியுள்ளதாக வைகோ தெரிவித்தார்.

திராவிட முன்னேற்ற கழகத்தை விட அதிக இடங்களை, தமிழக வெற்றி கழகத்திற்கு மக்கள் அளித்துள்ள இந்த தீர்ப்பை, தாங்கள் மதிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், “திமுக கூட்டணியை யாராலும் தொட முடியாது. தவெகவிற்கு ஆதரவு அளிக்க வாய்ப்பு இல்லை. திமுகட்டணியில் இருக்கும் அனைவரும், கூட்டணியிலேவ தொடர்வார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலினை தவெக வேட்பாளர் விஎஸ் பாபு 8795 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.