தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் எடையில் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ த.வெ.க. அரசின் தேர்தல் வாக்குறுதிகளில் மிகவும் கவனம் பெற்றது.
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு, தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் முனைப்பு காட்டி வருகிறது.
அந்த வகையில் முதலமைச்சர் விஜய் தலைமையில், வெற்றித் தமிழகம் தொலைநோக்கு திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கி இருக்கிறது. இதன்படி ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் ஜூன் 22 முதல் பிறந்த ஒவ்வொரு குழந்தையையும் மற்றும் தாயையும் கவுரவிக்கும் விதமாக தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் எடையில் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ த.வெ.க. அரசின் தேர்தல் வாக்குறுதிகளில் மிகவும் கவனம் பெற்றது. இந்த தாய்மாமன் தங்க மோதிரம் திட்டமானது தமிழ்நாடு அரசின் சுகாதாரச் சேவைகளில் மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் நோக்கிலும், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தையின் பிறப்பை நினைவு கூறும் வகையிலும், தாய்மையின் மகிழ்ச்சி மற்றும் முக்கியத்துவத்தை கொண்டாடும் வகையிலும் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்தநாளில் தொடங்கி வைக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் கடந்த ஜூன் 22-ந் தேதி அறிவித்தார். அன்றைய நாளில் இருந்து பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் இந்த திட்டத்திற்காக ஆண்டுக்கு ரூ.755.83 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது.
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தமிழக அரசு சார்பில் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தமிழர் பாரம்பரியத்தில் தாய்மாமன் சீர் வழங்கும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இதில் ஒரு கிராம் எடையுள்ள 4,41,667 தங்க மோதிரங்கள் வழங்க அரசாணை வழங்கப்பட்டதை தொடர்ந்து 14.07.2026 அன்று தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தால் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன. இத்திட்டமானது அண்ணா பிறந்த நாளான 2026 செப்டம்பர் 15-ந்தேதி தொடங்கி வைக்கப்பட இருப்பதாகவும் அறிவிப்பு வெளியானது.
ஆனால் முதலமைச்சரின் லண்டன் அரசுமுறை வெளிநாடு பயணம் காரணமாக திட்டத்தின் தொடக்க விழா தள்ளிப்போனது. முன்னதாக திட்டம் அறிவிக்கப்பட்ட ஜூன் மாதத்திலிருந்து நான்கு மாதங்களுக்கு தேவையான 1,28,499 தங்க மோதிரங்களை பயனாளிகளுக்கு வழங்குவதற்காக கொள்முதல் செய்யும் பணிகள் தொடங்கின.
முதலில் இத்திட்டத்தை தாய்மாமன் சீர் கலாசாரம் அதிகம் உள்ள உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் தொடங்க திட்டமிடப்பட்டது. உசிலம்பட்டியில் தெருக்கள் குறுகலாக இருப்பதால் கூட்டத்தை கட்டுப்படுத்துவது சிரமம், பாதுகாப்பு காரணங்களால் கடைசி நேரத்தில் இந்த திட்ட தொடக்க விழா மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.
அதன்படி தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட தொடக்க விழா மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நாளை (28-ந்தேதி, திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதற்காக முதல்கட்டமாக தமிழக அரசு சார்பில் 89,955 மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன. மதுரையில் நடைபெறும் விழாவிற்கு முன்னேற்பாடாக 1,106 தங்க மோதிரங்கள் கடந்த வாரம் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டன.
சிறப்பு வாய்ந்த இந்த திட்ட தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகிறார். விமான நிலையத்தில் அமைச்சர்கள், கலெக்டர், காவல்துறை அதிகாரிகள், எம்.எல்.ஏ.க்கள் வரவேற்பு அளிக்கிறார்கள்.
இதையடுத்து அங்கிருந்து பிரத்யேக வாகனத்தில் புறப்படும் முதலமைச்சர் விஜய், விமான நிலையம் முதல் விழா நடைபெறும் ராஜாஜி அரசு மருத்துவமனை வரை சாலையின் இருபுறமும் திரண்டு நிற்கும் பொதுமக்களின் வரவேற்பை ஏற்றுக் கொள்கிறார். இதற்காக அவர் ‘ரோடு-ஷோ’ நடத்தவும் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
முதலமைச்சர் வருகையை முன்னிட்டு மதுரையில் முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விழா நடைபெறும் ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் உள்ள சாலைகள் சீரமைக்கப்பட்டு, பனகல் சாலையில் புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் பெயர்ந்து கிடந்த தரை அப்புறப்படுத்தப்பட்டு அந்த பகுதி முழுவதும் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.
சேதமடைந்த கட்டிட பகுதிகள் பொதுப்பணித் துறை மூலம் சரிசெய்யப்பட்டு உள்ளன. மருத்துவமனை வளாகத்தில் தேங்கிய குப்பை, கழிவுகள் அகற்றம், தூய்மை பணிகள் நிறைவடைந்துள்ளன. முதலமைச்சர் பயணிக்க உள்ள சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, சாலயின் இருபுறமும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அரசு மருத்துவமனை கலையரங்கில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டு தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து பிரசவ வார்டு பகுதிக்கு செல்லும் அவர் பிறந்த குழந்தைகளுக்கு தனது கைகளாலேயே தங்க மோதிரங்களை அணிவிக்கிறார்.
இத்திட்டத்தின் கீழ், 2026 ஜூன் 22-ந்தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் பயன் பெறுவார்கள். இதேபோல் தமிழகத்தில் உள்ள 107 அரசு மருத்துவ மனைகளுக்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் பிறந்த குழந்தைகளுக்கு வழங்குவதற்காக மோதிரங்கள் எடுத்து செல்லப்பட்டு தயார் நிலையில் உள்ளன. அதனை அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வழங்குவார்கள்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் என்.ஆனந்த், அருண்ராஜ், நிர்மல்குமார் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொள்கிறார்கள்.
இதையடுத்து ரூ.10.25 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட மதுரை காந்தி மியூசியத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைக்கிறார். அங்கு மகாத்மா காந்தியின் ரத்தம் தோய்ந்த ஆடைகள் மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்களை பார்வையிடுகிறார். அதனை தொடர்ந்து கடந்த 17-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும் திட்டமிட்டுள்ளார். கும்பாபிஷேகத்தின் போது லண்டன் பயணம் காரணமாக வரமுடியாததால் இப்போது தரிசனம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
முதலமைச்சர் மதுரை வருகையையொட்டி நகரின் பல்வேறு பகுதிகளில் அலங்கார வளைவுகள், பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டும், கட்சி கொடிகள், தோரணங்கள் கட்டப்பட்டும் விழாக்கோலம் பூண்டுள்ளது. பாதுகாப்பு பணிக்காக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.