முதலமைச்சர் விஜய்  
தமிழக செய்திகள்

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆய்வுக் கூட்டம் நிறைவு

இத்திட்டத்திற்காக முதல் தவணையாக 1,28,000 தங்கமோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத் தொடக்கம் மற்றும் செயல்படுத்துதல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

முதலமைச்சர் ஜோசப் விஜய் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை 28.9.2026 அன்று தொடங்கி வைக்கிறார்.

இந்நிலையில் முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத் தொடக்கம் மற்றும் செயல்படுத்துதல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அரசு தரப்பில் இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில்,

"தமிழ்நாடு அரசு தாய்-சேய் நலனை மேம்படுத்துவதற்கு மிகுந்த முன்னுரிமை அளித்து வருகிறது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதியுதவி, இலவச பிரசவம் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தை பராமரிப்பு சேவைகள், அவசர மகப்பேறு சிகிச்சை, ஊட்டச்சத்து அளித்தல், பிரசவத்திற்காக மருத்துவமனையைத் திட்டமிடும் முறை, கர்ப்பிணி மற்றும் குழந்தைகள் கூட்டுக் கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு மென்பொருள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு மாநிலத்தில் தாய்-சேய் நலக் குறியீடுகள் குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்

தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்ந்த சேவைகளில் மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலும், தமிழர் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தில், தாய்மாமன் சீர்மரபைப் பிரதிபலிக்கும் வகையிலும் வெற்றித் தமிழகம் தொலைநோக்குத் திட்டத்தின்படி, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளைச் சிறப்பிக்கும் வகையில் “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” என்ற சிறப்பு நலத்திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ், 22.06.2026 அன்று முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்கமோதிரம் வழங்கப்படும். இதற்கான அரசாணை 23.06.2026 அன்று வெளியிடப்பட்டது.

பிரசவங்கள்

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 7.80 இலட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. இவற்றில் 99.9 சதவீத பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன என்று தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு-6ல்பதிவாகியுள்ளது.

இவற்றில் 4.20 இலட்சம் பிரசவங்கள் (53%) அரசு மருத்துவமனைகளில் நிகழ்கின்றன. அதில் 90 சதவீதம் சீமாங் மையங்களில் (CEmONC Centres) நடைபெறுகின்றன.

இதன்மூலம், பாதுகாப்பான பிரசவம் மற்றும் ஆரோக்கியமான குழந்தைகளின் பிறப்பை உறுதி செய்வதில் பொது சுகாதார அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது.

தங்க மோதிரம்

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒரு கிராம் எடை கொண்ட தங்க மோதிரம் வழங்கப்படும்.

அதற்கென தனித்துவமான வரிசை எண்ணும் (Unique Serial Number), சேதப்படுத்த முடியாத பாதுகாப்புப் பெட்டகமும் (Tamper-proof Packaging) வழங்கப்படும்.

இத்திட்டத்திற்காக முதல் தவணையாக 1,28,000 தங்கமோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் தாய்மார்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்கள். PICMEயில் பதிவு செய்யப்பட்டு RCH அடையாள எண் பெற்றிருக்க வேண்டும்.

இத்திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 28.09.2026 அன்று தொடங்கி வைக்கப்படவுள்ளது. மேலும், அரசு மருத்துவமனைகளில் 22.06.2026 முதல், திட்டம் தொடங்கப்படும் நாள் வரை பிறக்கும் குழந்தைகளுக்கு 107 மையங்களில் தினமும்100 குழந்தைகள் வீதம் 28.09.2026 முதல் வழங்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இத்திட்டம் முதலமைச்சர் அவர்களால் தொடங்கப்படும் நாளிலிருந்து அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும்போது தங்கமோதிரம் வழங்கப்படும்.

செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் தவிர்த்து

இந்தியத் தேர்தல் ஆணையத்தால் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், அத்தொகுதிகள் இடம்பெற்றுள்ள செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்களைத் தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் இத்திட்டம் 28.9.2026 அன்று தொடங்கி வைக்கப்படும்.

இத்திட்டம், அரசு மருத்துவ சேவைகளில் மக்களின் நம்பிக்கையை அதிகரிப்பதோடு, மருத்துவமனைகளில் பாதுகாப்பான பிரசவமுறையை ஊக்குவிப்பதாகவும், தாய்-சேய் நலப் பாதுகாப்பை வலுப்படுத்துவதாகவும், குழந்தை நலனில் அரசின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

கூட்டம்

இக்கூட்டத்தில், மாண்புமிகு மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் கோ.க. அருண்ராஜ், தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் திரு. மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் மரு. தாரேஸ் அகமது, இ.ஆ.ப., தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநர் மரு. அனீஷ் சேகர், இ.ஆ.ப., நகராட்சி நிர்வாக இயக்குநர் திரு.பி.மதுசூதன் ரெட்டி, இ.ஆ.ப., தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் மரு. எஸ். உமா, இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மரு. ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT