தமிழக செய்திகள்

வண்ணாரப்பேட்டையில் ஜவுளி வியாபாரிகள் ‘திடீர்’ சாலை மறியல்- போக்குவரத்து பாதிப்பு

தகவல் அறிந்ததும் வண்ணாரப்பேட்டை போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.

வண்ணாரப்பேட்டையில் ஜவுளி வியாபாரிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. நடைபாதை கடைகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

வண்ணாரப்பேட்டை எம்.சி. சாலையில் சுமார் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட கட்பீஸ் ஜவுளிக் கடைகள் உள்ளன. ஏராளமான ஊழியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

சாலை மறியல்

எம்.சி.ரோடு, ஜி.ஏ.சாலை ஆகிய பகுதிகளில் நடைபாதைகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு உள்ள நடைபாதை கடைகளை முழுமையாக அகற்ற வேண்டும் என்று வண்ணாரப்பேட்டை கட்பீஸ் ஜவுளி வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் தங்களது கோரிக்கை வலியுறுத்தி எம்.சி.ரோடு சிமெண்ட்ரி சாலை சந்திப்பில் இன்று காலை ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்பீஸ் ஜவுளி வியாபாரிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் கடை ஊழியர்களும் ஏராளமானோர் பங்கேற்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் வண்ணாரப்பேட்டை போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.

வியாபாரிகளின் இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு கடும் போக்குவரத்து நெரிசலும், பரபரப்பும் ஏற்பட்டது. தீபாவளி பண்டிகை நெருங்கி உள்ள நிலையில் அகற்றப்படாத நடைபாதை கடைகளால் வியாபாரம் பாதிக்கப்படும் என்று வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

SCROLL FOR NEXT