தமிழக செய்திகள்

தவெக முன்னிலை: திமுக அவதூறுகளை முறியடித்த மக்கள் தீர்ப்பு..!- அமைச்சர் ஷாஜகான்

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் தமிழக வெற்றிக்கழகம் முன்னிலை வகித்து வருகிறது.

தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு கடந்த 6-ந்தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் மதுராந்தகத்தில் 86.26 சதவீதம், தாராபுரத்தில் 80.30 சதவீதம் வாக்குகள் பதிவானது.

இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் தமிழக வெற்றிக்கழகம் முன்னிலை வகித்து வருகிறது.

இந்நிலையில், தவெகவின் முன்னிலை குறித்து அமைச்சர் ஷாஜகான் கூறியதாவது:-

தமிழக முதலமைச்சர் விஜய் வழங்கிய நல்லாட்சிக்கு மக்கள் வழங்கிய தீர்ப்பு தான் இடைத்தேர்தல் முடிவு. தவெக ஆட்சியை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதன் எதிரொலிப்பு தான் இடைத்தேர்தல் முடிவு.

மதுராந்தகம் தொகுதியில் கடந்த முறை 2வது இடத்தை பிடித்த தவெக இப்போது முதலிடத்தை பிடித்துள்ளது.

அடிப்படை ஆதாரமின்றி குதிரை பேரம் என அவதூறு பரப்பினார்கள். அந்த அவதூறு முறியடிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தோல்வியில் இருந்து திமுக வெளியில் வர முயற்சிக்க வேண்டுமே தவிர அவதூறுகளை பரப்பக்கூடாது.

ஆ.ராசா போன்றோர்களை வைத்து அவதூறாகவும் ஆபாசமாகவும் பேசுவது கண்டிக்கத்தக்கது.

அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் வெற்றியை நோக்கி முன்னேறுவதால் மகிழ்ச்சி அடைகிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT