தமிழக செய்திகள்

முதலமைச்சர் துறையில் டெண்டர் முறைகேடு... அமைச்சர் சரத்குமாருக்கு தொடர்பு - அறப்போர் இயக்கம் புகார்!

ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவோம் என உறுதியளித்து வந்த புதிய தவெக அரசின் கீழ், இது போன்ற டெண்டர் முறைகேடுகள் நடைபெறுவது அதிர்ச்சியளிக்கிறது என அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வசம் உள்ள நகராட்சி நிர்வாகத் துறையின் கீழ் வரும், தாம்பரம் மாநகராட்சியில் ரூ.45 லட்சத்து, 90 ஆயிரம் மதிப்பிலான டெண்டர்களில் மிகப்பெரிய கூட்டுச் சதி மற்றும் முறைகேடு நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் ஆதாரங்களுடன் குற்றம் சாட்டியுள்ளது.

கூட்டுச் சதி குற்றச்சாட்டு

பணிகள் ஏற்கனவே முடிக்கப்பட்ட நிலையில், தங்களுக்கு சாதகமான ஒப்பந்ததாரர்களுக்கு பணத்தை ஒதுக்குவதற்காக தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் ஐஏஎஸ் மற்றும் அமைச்சர் சரத்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் முறைகேடாக டெண்டர் நிர்ணயம் செய்து கூட்டுச் சதியில் ஈடுபட்டுள்ளனர் என அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.

கோரிக்கை

தவெக ஆட்சியில் ஊழலைப்போம் என்று கூறும் முதலமைச்சர் விஜய் , தன் சொந்தத் துறையிலேயே நடந்துள்ள இந்த முறைகேடு குறித்து சம்பந்தப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி மற்றும் அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

புகார்

இந்த முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர், தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாக இயக்குநர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் ஆகியோருக்கு அறப்போர் இயக்கம் விரிவான புகார் மனுவை ஆதாரங்களுடன் அனுப்பியுள்ளது.

2 ஒப்பந்தங்களில் முறைகேடு

பெருங்களத்தூர் பாலம் ரவுண்டானா பணி, சிட்லபாக்கம் ரவுண்டானா பணி ஆகிய இரண்டு ஒப்பந்தங்களில் முறைகேடு நடந்துள்ளது.

பெருங்களத்தூர் பால பணிகளுக்கான டெண்டர் அறிவிப்பு ஆக.6ம் தேதிதான் இணையத்தில் வெளியிடப்பட்டது. ஆனால் ஜூலை.29ம் தேதியே அசோகத் தூணை அமைச்சர் சரத்குமார் திறந்துவைத்தார். இதற்கான திறப்பு விழா வீடியோவையும் அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இரண்டாவது சிட்லபாக்கம் ரவுண்டானாவில் தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு சிலை அமைத்தல் மற்றும் அழகுபடுத்தும் பணிகளுக்காக ரூ. 18,60,000 மதிப்பிலான டெண்டரும் ஆகஸ்ட் 6 அன்று தான் வெளியிடப்பட்டது.

ஆனால், ஆகஸ்ட் 10ம் தேதியே இந்த சிலை திறக்கப்பட்டு, அதற்கான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் அதே நாளில் பகிரப்பட்டுள்ளன.

இது அதிகாரிகளுக்கும், ஒப்பந்ததாரருக்கும் இடையேயான சட்டவிரோத கூட்டணியை உறுதி செய்கிறது என அறப்போர் இயக்கம் கூறியுள்ளது.

தாம்பரம் மாநகராட்சி டெண்டர்கள்

மேலும், கடந்த 4 மாதங்களில் தாம்பரம் மாநகராட்சி வெளியிட்ட 565 டெண்டர்களில் 309 டெண்டர்கள் (சுமார் 54.69%) இதே போல இணையதளத்தில் திறக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.

ஒரே ஒரு டெண்டர் மட்டுமே இறுதி நிலையை அடைந்துள்ளது.

அறப்போர் இயக்கத்தின் கோரிக்கை

இத்தகைய ஒப்பந்த முறைகேடுகள் மீது தமிழ்நாடு அரசு எவ்விதத் தயக்கமுமின்றி உடனடியாகவும், கடுமையாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறப்போர் இயக்கம் கோரியுள்ளது.

அமைச்சர் சரத்குமார் சிலைகளை திறந்துவைத்ததற்கான வீடியோக்கள்

SCROLL FOR NEXT