கருப்பண்ணசாமி முன்பு படையல் போடப்பட்டு பூஜைகள் நடந்தது. சுவாமி உத்தரவு வழங்கிய பின்பு பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமாக வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து வந்து திருவிழாவில் பங்கேற்று கறி விருந்தை ருசித்து சென்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே தருமத்துப்பட்டி கிராமத்தில் சுமார் 350 ஆண்டுகள் பழமையான கோட்டை கருப்பண்ணசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடம் தோறும் புரட்டாசி மாதத்தில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று வழிபடும் நிகழ்வு நடைபெறும்.
இக்கோவில் திருவிழாவுக்காக சாமி சாட்டும் நிகழ்ச்சி கடந்த 15 நாட்களுக்கு முன்பு நடந்தது. அதன் பின்பு நேர்த்திக்கடன் செலுத்தக்கூடிய பொதுமக்களுக்கு அறிவிப்பு வெளியிப்பட்டது. அந்த அறிவிப்பை ஏற்று நேற்று இரவு 7 மணியில் இருந்து ஏராளமான பக்தர்கள் 100க்கும் மேற்பட்ட ஆட்டு கிடாய்களை காணிக்கையாக கருப்பண்ணசாமிக்கு வழங்கினர்.
கோவில் பூசாரியிடம் ஆடுகள் ஒப்படைக்கப்பட்ட பின்பு சிறப்பு பூஜைகள் நடத்தி நள்ளிரவில் அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு தீப்பந்தம் ஏந்தி பழமையான முறையில் பூஜைகள் செய்யப்பட்டு கிடாய்கள் கோட்டை கருப்பண்ணசாமி முன்பு நிறுத்தப்பட்டது. பின்னர் அவை பலியிடப்பட்டு காணிக்கையாக வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து கிடாய்கள் உறிக்கப்பட்டு அசைவ உணவு தயாரிக்கப்பட்டது. அந்த உணவு கருப்பண்ணசாமி முன்பு படையல் போடப்பட்டு பூஜைகள் நடந்தது. சுவாமி உத்தரவு வழங்கிய பின்பு பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமாக வழங்கப்பட்டது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து வந்து திருவிழாவில் பங்கேற்று கறி விருந்தை ருசித்து சென்றனர். நிலக்கோட்டை டி.எஸ்.பி. இளஞ்செழியன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்த வினோத வழிபாட்டை காண வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்தனர்.