தமிழக செய்திகள்

தமிழகத்தில் ஒரு வாரம் வெப்பம் அதிகரிக்கும்- வானிலை மையம் தகவல்

ஒரு வாரத்திற்கு ஒரு சில இடங்களில் மிதமான மழையே பெய்யக்கூடும்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்து வருகிறது. கோடை காலத்தில் வெயில் தாக்குவது போல ஜூலை மாதத்திலும் கொளுத்தி வருகிறது.

மழை

தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்யவில்லை. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மட்டுமே மழை பெய்து வருகிறது.

வானிலை ஆய்வு மையம்

இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மைய மண்டல இயக்குனர் துரை தெரிவித்து உள்ளார். அவர் மேலும் கூறியதாவது:-

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மோசமாக உள்ளது. மும்பை, குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் மேகங்கள் குறைவாக காணப்படுகின்றன. இந்த வானிலை சூழ்நிலை காரணமாக இன்று முதல் மேலும் ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் வெப்ப நிலை அதிகரிக்கும். வெப்பம் அதிகரிப்பதற்கு எல் நினோ ஒரு காரணமாகும்.

வெயில்

தமிழகத்தில் அதிகபட்சமாக 39 செல்சியஸ் டிகிரி வரை தற்போது வெயில் பதிவாகி வருகிறது. நேற்று தொண்டியில் அதிகபட்சமாக 39 டிகிரி வெயில் பதிவானது. சென்னை உள்பட பெரும் பாலான மாவட்டங்களில் வெயில் இயல்பை விட அதிகமாகவே இருக்கக்கூடும். ஒரு வாரத்திற்கு ஒரு சில இடங்களில் மிதமான மழையே பெய்யக்கூடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தென்மேற்கு பருவமழை

மேலும் தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா கூறும் போது, இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை காலத்தில் கேரள மாநிலம் கடுமையான மழை பற்றாக்குறையை எதிர் கொண்டு வருகிறது. அதேபோல் தமிழ்நாட்டிலும் மழை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

எல் நினோ காரணமாக ஜூன் மாதத்தினை தொடர்ந்து ஜூலை மாதத்திலும் கேரளா மற்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இயல்பை விட மழை குறைவாக பெய்யும். தென்மேற்கு பருவமழை தீவிரமடைய வாய்ப்பு இல்லை என்பதால் வரும் நாட்களில் குற்றால சீசன் களை இழக்கும்.

சென்னை முதல் நெல்லை வரையிலான கடலோர மாவட்டங்களில் கோடை காலத்தை மிஞ்சும் வகையில் வெயில் சுட்டெரிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.