தமிழக செய்திகள்

கண்ணீர் வணக்கம்..!- அஜித்தின் தாயார் மறைவுக்கு சீமான் இரங்கல்

அஜித் தாயாரின் மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் அஜித் குமாரின் தாயார் இன்று காலமாகியுள்ளார். அவருக்கு வயது 84. அஜித்தின் தாயாரான மோகினி மணி வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார்.

இவரது மறைவுக்கு திரைத்துறையினர், அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள இரங்கல் பதிவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்த்திரைத்துறையைச் சேர்ந்த முன்னணி திரைக்கலைஞர் அன்புச்சகோதரர் அஜித்குமார் அவர்களின் தாயார் அம்மா மோகினி மணி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன்.

ஆருயிர் அன்னையை இழந்து வாடும் சகோதரருக்கும், அவருடைய குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அன்புத் தாயாரின் மறைவால் ஈடுசெய்யவியலாத பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் அன்புச்சகோதரருக்கு இத்துயரிலிருந்து மீண்டுவர துணைநிற்கிறேன்.

அம்மா மோகினி மணி அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.