தமிழக செய்திகள்

ஆடம்பர செலவு..கடன் தொல்லை! பெற்ற தாயையே கொன்ற மகள்: கொள்ளை நாடகமாடி சிக்கிய பள்ளி ஆசிரியை

திருமணத்திற்குப் பல லட்சம் செலவு செய்ததையும், சரண்யாவின் நடத்தை குறித்தும் கீதா சுட்டிக்காட்டி விமர்சித்ததாகக் கூறப்படுகிறது.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே நடந்த பெண் கொலை வழக்கில், கொள்ளைச் சம்பவம் என நாடகமாடிய சொந்த மகளான பள்ளி ஆசிரியையை போலீசார் கைது செய்துள்ளனர். ஆடம்பர செலவு மற்றும் கடன்களால் ஏற்பட்ட வாக்குவாதமே இந்தக் கொலைக்குக் காரணம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் தென்கடப்பந்தங்கள் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ரவியின் மனைவி கீதா(54). இவர் அருகிலுள்ள ஷூ கம்பெனியில் பணியாற்றி வந்தார். இவர்களது மூத்த மகளான சரண்யா, தனியார் சர்வதேசப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். கணவரிடம் விவாகரத்து பெற்ற சரண்யா, தனது இரு மகன்களுடன் தாய் கீதாவின் வீட்டில் தங்கியிருந்துள்ளார். ஆடைகள் மற்றும் அழகுசாதன பொருட்களுக்காக ஆடம்பரமாகவும், கடன் வாங்கியும் செலவு செய்து வந்த சரண்யாவுக்கும், அதைக் கண்டித்து வந்த தாய் கீதாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

வாக்குவாதம்

கடன்களை அடைக்க அவசரமாகப் பணம் தேவைப்பட்டதால், சம்பவத்தன்று காலை தனது இரு மகன்களையும் பள்ளிக்கு அனுப்பிவிட்டுத் தாயிடம் நகைகளைத் தருமாறு சரண்யா கேட்டுள்ளார். திருமணத்திற்குப் பல லட்சம் செலவு செய்ததையும், சரண்யாவின் நடத்தை குறித்தும் கீதா சுட்டிக்காட்டி விமர்சித்ததாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த சரண்யா, அங்கிருந்த கயிற்றால் தாய் கீதாவின் கழுத்தை இறுக்கியும், அவர் மயங்கிச் சரிந்த பிறகு உயிர் பிழைக்கக் கூடாது என்பதற்காகக் காலால் கழுத்துப் பகுதியில் மிதித்தும் கொலை செய்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொள்ளை நாடகம்

கொலைக்குப் பிறகு கீதா அணிந்திருந்த 10 சவரன் தங்க நகை மற்றும் பீரோவில் இருந்த ரூ.10,000 ரொக்கப் பணத்தை எடுத்து மறைத்து வைத்துள்ளார். வெளியாட்கள் கொள்ளையடித்தது போல் காட்டுவதற்காகப் பீரோவை உடைத்ததோடு, மோப்ப நாய்களிடம் சிக்காமல் இருக்க வீடு முழுவதும் மிளகாய்ப் பொடியைத் தூவியுள்ளார். கைரேகைகள் பதியாதவாறு துணியால் துடைத்துவிட்டு, கதவைச் சாத்திவிட்டுப் பள்ளிக்குச் சென்றுள்ளார். மாலையில் பள்ளி முடிந்து வந்த பேரன் மூலம் தகவல் அறிந்து, ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மூன்று தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

சிசிடிவி காட்சிகள்

தேசிய நெடுஞ்சாலை அருகே வீடு இருப்பதால் வெளியாட்கள் நுழைந்திருக்கலாம் என்ற கோணத்தில் முதலில் சந்தேகிக்கப்பட்டது. ஆனால், அப்பகுதி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சம்பவத்தன்று காலையில் சரண்யாவும், பக்கத்து வீட்டு இளைஞரும் மட்டுமே வெளியே சென்றது பதிவாகியிருந்தது. அந்த இளைஞரின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்து விசாரித்ததில், சரண்யாவுக்கும் தாய்க்கும் இடையே இருந்த அடிக்கடி ஏற்படும் சண்டைகள் வெளிச்சத்திற்கு வந்தன. இதையடுத்து சரண்யாவிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் கொலை மற்றும் நாடகத்தை அவர் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, போலீசார் அவரைக் கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT