3 மாதங்கள் கடந்தும் கடை அகற்றப்படாமல் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பெண்கள் திரண்டு வந்து டாஸ்மாக் கடையை திறக்க விடாமல் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கொழந்தாகவுண்டனூர் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த கடையால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் மற்றும் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக கூறப்படுகிறது.
இதையடுத்து டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி அப்பகுதி பொதுமக்கள் கடந்த சில ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது. மேலும், டாஸ்மாக் மேலாளரிடமும் மனு அளித்துள்ளனர்.
இந்தநிலையில் கடந்த மே மாதம் 25-ந் தேதி டாஸ்மாக் கடையை திறக்க விடாமல் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அப்போதைய தாசில்தார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, கடையை அகற்ற 3 மாத கால அவகாசம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் 3 மாதங்கள் கடந்தும் கடை அகற்றப்படாமல் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பெண்கள் திரண்டு வந்து டாஸ்மாக் கடையை திறக்க விடாமல் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பசுபதிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தண்டபாணி, டாஸ்மாக் துணை மேலாளர் செந்தில் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் கடையை அகற்றாமல் போராட்டத்தை கைவிட மாட்டோம் என பொதுமக்கள் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு சில நாட்களில் டாஸ்மாக் கடையை அகற்றி வேறு பகுதிக்கு மாற்றுவதாக உறுதி அளித்தனர். இதனை ஏற்று சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.