கள்ளநோட்டுகளை அச்சிட்டு புழகத்தில் விட ஏதேனும் கும்பல் திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறதா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம், மானூர் தாலுகா வன்னி கோனந்தல், மேற்கு தெருவை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 48). இவர் ரெட்டியார்பட்டியில் உள்ள அரசு மதுபானக்கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 12-ந்தேதி மாலை தங்கராஜூடன் அந்த கடையின் மேற்பார்வையாளர் முருகன் உள்ளிட்டோர் பணியில் இருந்தனர். அப்போது அங்கு மது வாங்க வந்த வாலிபர் ஒருவர், 500 ரூபாய் நோட்டை கொடுத்து மது பாட்டில் கேட்டுள்ளார். அந்த பணத்தை வாங்கிய விற்பனையாளர் தங்கராஜ், கையில் எடுத்து சோதித்து பார்த்தபோது அது கள்ளநோட்டு என்பது தெரிய வந்துள்ளது. உடனே அவர் பெருமாள்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அங்கு சென்ற போலீசார், அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் அந்த வாலிபர் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா தெற்கு காரசேரி தெற்குத்தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் மகாராஜன் (33) என்பது தெரியவந்தது. அவர் சமீபகாலமாக தாழையூத்து அருகே உள்ள ராஜவல்லிபுரம் பூலித்தேவர் நகரில் வசிந்து வரும் நிலையில் டிரைவராக வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே கடந்த 5-ந்தேதியன்று அதே மது பானக்கடையில் வசூலான விற்பனை தொகையை வங்கியில் செலுத்தியபோது, ஒரு 500 ரூபாய் நோட்டானது, கள்ளநோட்டு என வங்கி அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பணத்தின் எண்ணும், தற்பொழுது கொடுத்த 500 ரூபாய் நோட்டின் எண்ணும் ஒன்று போலவே இருந்தது. இதையடுத்து கள்ளநோட்டுகளை அச்சிட்டு புழகத்தில் விட ஏதேனும் கும்பல் திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறதா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.