தமிழக செய்திகள்

TN Assembly Election | டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் மூடப்பட்டதால் ரூ.350 கோடிக்கு விற்பனை

தற்போது கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பீர் பாட்டில்கள் கொண்ட பெட்டிகளை அதிகமாக வாங்கி சென்றனர்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நாளை மறுநாள் (23-ந்தேதி) நடைபெறுவதால் மதுக்கடைகள், பார்கள் மற்றும் ஓட்டல் பார்கள் அனைத்தும் மூடப்பட்டன.

இன்று முதல் தேர்தல் நடைபெறும் 23-ந்தேதி வரை மூடப்படுவதால் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. நேற்று பகலிலேயே மது பானங்களை வாங்கி குவிக்க தொடங்கினர். தற்போது தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள கட்சித் தொண்டர்கள் மத்தியில் பணப் புழக்கம் அதிகமாக இருப்பதால் பெட்டி பெட்டியாக மதுபானங்களை வாங்கிச் சென்றார்கள்.

சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்கள் மற்றும் கிராமப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று இரவு 7 மணி முதல் நீண்ட வரிசை காணப்பட்டது. 3 நாட்கள் மது வகைகள் இல்லாமல் சமாளிப்பது மது பிரியர்களுக்கு மேலும் அதிர்ச்சியாக இருந்தது.

அதனால் நேற்று இரவு 10 மணிக்கு கடைகளை அடைக்க முடியாத அளவுக்கு கூட்டம் நிரம்பி காணப்பட்டது. ஒரு சில கடைகளில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தற்போது கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பீர் பாட்டில்கள் கொண்ட பெட்டிகளை அதிகமாக வாங்கி சென்றனர். இருசக்கர வாகனங்களிலும், கார்களிலும் மொத்தமாக மதுபானங்களை அள்ளிச் சென்றனர்.

இதனால் டாஸ்மாக் கடைகளில் நேற்று விற்பனை அமோகமாக நடைபெற்றது. ஊழியர்களால் மதுபானங்களை வழங்க முடியாத அளவிற்கு கூட்ட நெரிசல் இருந்தது.

வழக்கமாக டாஸ்மாக் கடைகள் மூலம் தினமும் ரூ.140 கோடி முதல் ரூ.150 கோடிக்கு மது விற்பனை நடைபெறும். ஆனால் நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.350 கோடிக்கு மது விற்பனை நடந்ததாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது வழக்கத்தை விட 2½ மடங்கு மது விற்பனை அதிகமாகும்.

பண்டிகை காலங்களில் நடைபெறும் மது விற்பனையை விட தேர்தல் நேரத்தில் மதுபானங்கள் அதிக அளவில் விற்பனையானது. கடைகள் மூடப்படுவதால் அதிகளவு மது விற்பனை ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டு நேற்று அனைத்து கடைகளிலும் தேவைக்கு அதிகமாக மதுபானங்களை குவித்து வைத்திருந்தனர். அதனால் கேட்கும் மதுபானங்களை மதுபிரியர்களுக்கு தேவையான அளவு வழங்கினார்கள்.