டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்ற பல கோடி ரூபாய் முறைகேடு தொடர்பான வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதனால் அவர் எந்நேரமும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.
முன்ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரித்த 'நீதிபதி ஜி.கே.இளந்திரையன்', மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார். விசாரணையின் போது, "டாஸ்மாக் நிறுவனத்தில் பெரும் முறைகேடு நடந்திருப்பதற்கும், அதன் மூலம் அரசு கருவூலத்திற்குப் பலத்த நிதி இழப்பு ஏற்பட்டிருப்பதற்கும் போதிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. மேலும், குற்றம்சாட்டப்பட்டவர் தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்ததற்கான ஆரம்பக்கட்ட முகாந்திரங்கள் தெளிவாக உள்ளன." இந்நிலையில், எதனடிப்படையில் முன்ஜாமீன் கோருகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.
தமிழக அரசின் கீழ் இயங்கும் டாஸ்மாக் நிறுவனம் மூலம் 5,380 மதுக் கடைகளும், 3,240 மதுக் கூடங்களும் (பார்கள்) இயங்கி வருகின்றன. 2021 முதல் 2025 வரை மது விற்பனை உயர்ந்தபோதிலும், அரசுக்கான வருவாய் கணிசமாகக் குறைந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து, தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை தீவிர விசாரணை நடத்தி, 11 பிரிவுகளின் கீழ் வழக்கைப் பதிவு செய்தது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜி உட்பட '7 பேர்' குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
2021-ஆம் ஆண்டில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் 857 டாஸ்மாக் பார்களுக்கு டெண்டர் கோரப்பட்டதில் பெரும் முறைகேடு நடந்துள்ளது. டெண்டரில் பங்கேற்றவர்கள் ஒரே வங்கிக் கிளையிலிருந்து தொடர்ச்சியான எண்களில் வரைவு காசோலைகளை பிணையத் தொகையாகச் செலுத்தியதன் மூலம் கூட்டுச்சதி அம்பலமாகியுள்ளது.
45 கிடங்குகளுக்கான போக்குவரத்து டெண்டர் நடைமுறையிலும் முறைகேடு நடந்துள்ளது. மேலும், பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட பாட்டில்களைச் சேகரித்து மதுபான ஆலைகளுக்கு வழங்குவதில் ரூ.143 கோடி வரை முறைகேடு செய்யப்பட்டுள்ளது.
வழக்கின் ஆதாரங்களைத் திரட்டும் வகையில், சென்னை, கரூர், நாமக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் 45 இடங்களில் ஊழல் தடுப்புத் துறையினர் ஒரே நேரத்தில் அதிரடிச் சோதனை நடத்தினர். கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு, அவரது ஆதரவாளர்கள் மற்றும் நண்பர்களின் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பல முக்கியமான ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வழக்கின் முதல் தகவல் அறிக்கை (FIR) சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், முன்ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், செந்தில் பாலாஜியை விசாரணைக்காகக் கைது செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை சட்டரீதியான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. இந்நிலையில், செந்தில் பாலாஜி கட்சி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.