தமிழக செய்திகள்

தனியாருக்கு மாறும் டாஸ்மாக் மது விற்பனை- அரசு பரிசீலனை

மது விற்பனையை தனியாருக்கு முற்றிலும் கொடுப்பதன் மூலம் என்னென்ன சாதக , பாதகங்கள் உள்ளன என்பது பற்றியும் முதலமைச்சர் கேட்டறிந்தார்.

முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பிறகு போதை கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு கஞ்சா, மது விற்பனை போன்றவையே முக்கிய காரணமாக இருக்கிறது என்பதை அறிந்து 717 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு அவர் உத்தரவிட்டார்.

இதுவரையில் 500 கடைகள் மூடப்பட்டுள்ளன. மீதமுள்ள கடைகளை மூடும் பணிகள் நடந்து வருகிறது. தற்போது தமிழகத்தில் 4,171 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்பட்டு வருவதை தடுக்கவும் முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார்.

அதன் ஒரு பகுதியாக அவர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக வசூலிக்கப்படும் ரூ.10 விவகாரம் சமூக வலைதளங்களில் சர்ச்சை ஆகி வருகிறது. மதுபானத்தை அரசின் நிறுவனம் விற்பதால் கெட்ட பெயரும் ஏற்படுகிறது. இது தொடர்பாக முதலமைச்சர் விஜய், அதிகாரிகளுடன் பல்வேறு கருத்துக்களை கேட்டறிந்தார்.

டாஸ்மாக் ஊழியர்கள் தரப்பில் வைக்கப்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. கேரளம் மாநிலத்தில் நடைபெறும் மது விற்பனையை பின்பற்றினால் தவறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்ற அவர்களின் கருத்தையும் அதிகாரிகள் எடுத்துரைத்தனர். புதுச்சேரியில் அரசு கூட்டுறவு சங்கம் மூலம் மதுபான விற்பனை செய்வதோடு மட்டுமல்லாமல் தனியார்களும் மதுக்கடைகளை நடத்தி வருகிறார்கள். அந்த முறையை பின்பற்றினால் அரசின் கட்டுப்பாட்டிலேயே மதுபானம் விற்பனை இருக்கும். ஆனால் கடைகளை தனியார் நடத்துவார்கள் என்பதையும் விளக்கி கூறப்பட்டது.

மது விற்பனையை தனியாருக்கு முற்றிலும் கொடுப்பதன் மூலம் என்னென்ன சாதக , பாதகங்கள் உள்ளன என்பது பற்றியும் முதலமைச்சர் கேட்டறிந்தார். புதுச்சேரியில் மது விற்பனை செயல்பாட்டு முறையை ஆய்வு செய்து அறிக்கை கொடுக்கவும் அதிகாரிகளிடம் அவர் கூறியதாக தெரிகிறது.

டாஸ்மாக் மதுக்கடைகளை தனியாருக்கு கொடுக்கும் பட்சத்தில் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு மாற்று ஏற்பாடு என்ன செய்வது என்பதைப் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. எனவே விரைவில் டாஸ்மாக் மது விற்பனையில் அதிரடி மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. தனியாருக்கு கொடுப்பதன் மூலம் அரசின் வருமானம் பாதிக்குமா? என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

புதுச்சேரி மாடலில் தமிழகத்தில் மது விற்பனை அல்லது முற்றிலும் தனியாருக்கு கொடுத்துவிட்டு மதுபானங்களை அரசே கொள்முதல் செய்து வழங்கும் முறையைப் பின்பற்றுவதா? என்பது பற்றியும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டம் அடுத்த ஓரிரு மாதங்களில் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது.