சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் துறைவாரியாக ஒவ்வொரு நாளும் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறார்.
அந்த வகையில் இன்று காலையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அதிகாரிகளை அழைத்து ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ் கலந்து கொண்டார்.
தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்த நிலையில் இன்னும் முழுமையாக அந்த கடைகளை மூடவில்லை. 650 கடைகள் தான் மூடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அடையாளம் காணப்பட்ட மற்ற கடைகளை எப்போது மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
அந்த வகையில் இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
அதேபோல டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்கும் விவகாரத்தில் பாட்டிலை திரும்பி வாங்குவதற்கு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதில் உள்ள சிக்கல் பற்றியும் முதலமைச்சர் விஜய் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பள்ளி கல்லூரி கோவில்கள் அருகே இன்னும் எவ்வளவு மதுக்கடைகள் உள்ளன. அவை எப்போது மூடப்படும் என்ற விவரங்களையும் முதலமைச்சர் விஜய் அதிகாரியிடம் கேட்டறிந்தார். இது குறித்து விரைவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.