தமிழக செய்திகள்

டாஸ்மாக் முறைகேடு விவகாரம்: முன்னாள் மேலாண் இயக்குனர் விசாகன் தலைமறைவு?

செந்தில் பாலாஜி தொடர்புடைய 45 இடங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையும் மேற்கொண்டனர்.

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்கள் 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.

செந்தில் பாலாஜி மீது புதிய வழக்கு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, புதிய வழக்கு ஒன்றை லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கையொட்டி தமிழகம் முழுவதும் செந்தில் பாலாஜி தொடர்புடைய 45 இடங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையும் மேற்கொண்டனர்.

இந்த புதிய வழக்கில், செந்தில் பாலாஜி முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். 2-வது குற்றவாளியாக டாஸ்மாக் நிறுவனத்தின் முன்னாள் மேலாண்மை இயக்குனர், ஐ.ஏ.எஸ். அதிகாரி விசாகன் இருக்கிறார். 3-வது மற்றும் 4-வது குற்றவாளிகளாக சீனியர் மேலாளர்கள் ராமதுரைமுருகனும், பன்னீர்செல்வமும் இணைக்கப்பட்டு உள்ளனர்.

5-வது குற்றவாளியாக செந்தில் பாலாஜியின் தனிப்பட்ட உதவியாளர் பாஸ்கர் உள்ளார். இவர்களை தொடர்ந்து 6-வது மற்றும் 7-வது குற்றவாளிகளாக செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான ரத்தேஷ்ராஜ் சண்முகவேல் என்பவரும், கார்த்திக் என்ற மூலநூர் கார்த்திக் என்பவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

2 பேர் கைது

ரத்தேஷ் ராஜ் சண்முகவேலும், மூலநூர் கார்த்திக் என்பவரும்தான் 'கரூர் கேங்' என்ற பெயரில் வசூல் வேட்டையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டில் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் மறுக்கப்பட்டது.

ஆனால் சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனைகளுடன், அவருக்கு முன்ஜாமின் வழங்கியுள்ளது. முன்ஜாமின் கிடைத்துவிட்டதால், இந்த வழக்கில் செந்தில் பாலாஜி விரைவில் லஞ்ச ஒழிப்பு போலீசில் விசாரணைக்கு ஆஜராவார்.

இந்தநிலையில் அவருக்கு நெருக்கமான நண்பர்களாக கூறப்படும், கார்த்திக் என்பவரும், ரமேஷ் என்பவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.

கார்த்திக்கின் பெயர் ஏற்கனவே போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில், 7-வதாக இடம்பெற்றுள்ளது. கைதான ரமேஷ் என்பவர் புதிதாக வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக, லஞ்சஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். கைதாகி உள்ள இவர்கள் இருவரும் ஆட்சி கவிழ்ப்பு சதி வழக்கிலும் சம்பந்தப்பட்டவர்கள் என்பது குறப்பிடத்தக்கது.

விசாகன் தலைமறைவு

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் முன்னாள் மேலாண் இயக்குநர் விசாகன் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டாஸ்மாக் முறைகேடு புகாரில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட நிலையில் விசாகனை விசாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

விசாரணை தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அணுகியபோது விசாகனின் செல்ஃபோன் அணைக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

டாஸ்மாக் முறைகேட்டில் இரண்டாவது குற்றம்சாட்டப்பட்ட நபராக விசாகன் சேர்க்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் கைதானோர் அளித்த வாக்குமூலத்தின் பேரில் விசாகனை விசாரிக்க போலீசார் தேடி வருகின்றனர்.