டாஸ்மாக் முறைகேடு வழக்கில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமின் மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் த.வெ.க. ஆட்சி அமைந்த பிறகு கடந்த தி.மு.க. ஆட்சியில் எழுப்பப்பட்ட பல்வேறு முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த தி.மு.க. ஆட்சியில் டாஸ்மாக்கில் பல்வேறு முறைகேடுகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக சட்டமன்றத்திலும் முதலமைச்சர் விஜய் விமர்சனம் செய்து பேசினார். ‘‘பார்ட்டி பண்ட்” என்ற பெயரில் தனியாக பணம் வசூல் செய்யப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியதுடன் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து இருந்தார்.
இதனை தொடர்ந்து டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சென்னை, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 41 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னை தி.நகர் தணிகாசலம் சாலையில் உள்ள மதுபான நிறுவன அலுவலகத்திலும், கரூரில் செந்தில் பாலாஜியின் வீடு உள்பட 6 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. மேலும் செந்தில்பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் இடங்களிலும் சோதனை நடைபெற்றது.
இதற்கிடையே, டாஸ்மாக் மதுபான கொள்முதல், டெண்டர் உள்ளிட்டவற்றில் மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி, டாஸ்மாக் முன்னாள் எம்.டி.விசாகன் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த நிலையில், டாஸ்மாக் முறைகேடு வழக்கில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமின் மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.
முன்ஜாமின் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு 3-வது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளது.