தமிழக செய்திகள்

டாஸ்மாக் ஊழியர்களுக்கு வரும் நவம்பர் 15 முதல் சீருடை கட்டாயம்: அரசு அதிகாரப்பூர்வ உத்தரவு!

தொழில்முறை தோற்றத்தையும் ஒழுங்கையும் மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

புதிய உத்தரவின்படி, கடை மேற்பார்வையாளர்கள் லைட் ப்ளூ நிற சட்டையும், நேவி ப்ளூ நிற பேண்ட் அணிய வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் வரும் நவம்பர் 15-ஆம் தேதி முதல் கட்டாயமாக குறிப்பிட்ட வண்ண சீருடைகளை அணிய வேண்டும் என்று தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் நிறுவனத்தின் சேவைகளில் சீரான தன்மையையும், ஊழியர்களிடையே தொழில்முறை தோற்றத்தையும் கொண்டு வரும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தவிகளுக்கேற்ப சீருடை நிறங்கள்

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறையின் 2026-27 கொள்கைக் குறிப்பின்படி, மாநிலம் முழுவதும் உள்ள 4,048 சில்லறை விற்பனைக் கடைகளில் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்கள் உட்பட மொத்தம் 22,877 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

புதிய உத்தரவின்படி, கடை மேற்பார்வையாளர்கள் லைட் ப்ளூ நிற சட்டையும், நேவி ப்ளூ நிற பேண்ட் அணிய வேண்டும். விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்கள் பழுப்பு நிற சட்டையும், அடர் சாம்பல் நிற பேண்ட் அணிய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து சட்டைகளின் இடதுபுற நெஞ்சுப் பகுதியில் டாஸ்மாக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இலச்சினை இடம்பெற வேண்டும்.

கோ-ஆப்டெக்ஸ் மூலம் துணி கொள்முதல்

துணியின் தரம் மற்றும் வண்ண நிழல்கள் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாக இருப்பதை உறுதிசெய்வதற்காக, ஊழியர்கள் அனைவரும் தங்களின் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள அரசுக்கு சொந்தமான 'கோ-ஆப்டெக்ஸ்' விற்பனையகங்களில் மட்டுமே குறிப்பிட்ட துணியை வரும் அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் கொள்முதல் செய்ய வேண்டும். தொடர்ந்து, நவம்பர் 10-ஆம் தேதிக்குள் சீருடைகளைத் தைத்து முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் ரூ.6,000 சீருடைப் படி

இந்தத் திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவதற்காக, ஒவ்வொரு ஊழியருக்கும் மூன்று செட் சீருடைகள் தைப்பதற்காக ஆண்டுக்கு ரூ.6,000 சீருடைப் படியாக அரசு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. ஆண்டுக்கு 3 செட் சீருடைகளுக்கு தலா ரூ.2000 வீதம் இந்தத்தொகை வழங்க வேண்டும். வரும் நவம்பர் 15 முதல் கடைகளின் வேலை நேரத்தின் போது ஊழியர்கள் சீருடை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதைக் கண்காணிப்பதற்காக மாவட்ட மேலாளர்கள் நவம்பர் பாதியில் இருந்து தீவிர ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளனர். சீருடைப் படியைப் பெற்றுக்கொண்டு காரணமின்றி சீருடை அணியத் தவறினாலோ அல்லது துணி வாங்கத் தவறினாலோ, வழங்கப்பட்ட பணம் திரும்பப் பெறப்படுவதோடு ஊழியர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும் என நிர்வாகம் எச்சரித்துள்ளது.

SCROLL FOR NEXT