தமிழக செய்திகள்

மதுப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: மேலும் 54 நிறுவன மதுபானங்களை அறிமுகப்படுத்த டாஸ்மாக் முடிவு

அண்டை மாநிலங்களில் விற்பனையாகும் பிரபல நிறுவனங்களின் மதுபான வகைகள் தமிழகத்தில் கிடைப்பதில்லையே என்ற ஏக்கம் மதுப்பிரியர்களிடம் இருந்து வருகிறது.

டாஸ்மாக் நிர்வாகம் மேலும் 54 நிறுவன மதுபானங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது மதுப்பிரியர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏக்கம்

தமிழகத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளில் 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் விஸ்கி, பிராந்தி, ரம், ஒட்கா, பீர் உள்ளிட்ட மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் இதில் குறிப்பிட்ட சில நிறுவனங்களின் மதுபானங்களே மதுப்பிரியர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளன. மீதம் உள்ள நிறுவன மதுபான வகைகள் போதுமான வரவேற்பை பெறவில்லை.

பண்டிகை காலங்கள் உள்ளிட்ட தேவை அதிகமாக உள்ள நேரத்தில் மட்டும் அவை விற்பனையாகின்றன. இதுபோல புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரா மற்றும் கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் விற்பனையாகும் பிரபல நிறுவனங்களின் மதுபான வகைகள் தமிழகத்தில் கிடைப்பதில்லையே என்ற ஏக்கம் மதுப்பிரியர்களிடம் இருந்து வருகிறது.

மகிழ்ச்சி

இந்த சூழலில், மதுப்பிரியர்களின் தாகத்தை தணிக்க மேலும் 54 நிறுவனங்களின் பிராந்தி, விஸ்கி, பீர் உள்ளிட்ட மதுபான வகைகளை டாஸ்மாக் பல்வேறு கட்டங்களாக அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மதுபானங்கள் விரைவில் மதுக்கடைகளுக்கு வந்துவிடும். தேர்வு செய்து மதுபானங்களை வாங்க முடியும் என்பதால் மதுப்பிரியர்கள் மகிழ்ச்சியில் உறைந்துள்ளனர்.

இதுகுறித்து டாஸ்மாக் மூத்த அதிகாரிகள் கூறுகையில், "வாடிக்கையாளர்களின் விருப்பம் கடந்த சில ஆண்டுகளில் மாற்றம் அடைந்திருக்கிறது. பிரீமியம் மற்றும் வரவேற்பு அதிகம் உள்ள பிராண்டு மதுபானங்களை கேட்கிறார்கள். அவர்களின் தேவையை அறிந்து, நாங்கள் விரிவான ஆலோசனை நடத்தி புது மதுபான வகைகளை அறிமுகம் செய்ய முடிவெடுத்துள்ளோம் " என்றனர்.