தமிழக செய்திகள்

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: ஐபிஎஸ் அதிகாரியின் சகோதரருக்கு லுக் அவுட் நோட்டீஸ்

தமிழகம் முழுவதும் 45 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

'டாஸ்மாக்' நிறுவனத்தில் 2021 முதல் 2025-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடு தொடர்பாக சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த மாதம் 28-ந்தேதி வழக்குப்பதிவு செய்தனர்.

இதில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, 'டாஸ்மாக்' முன்னாள் மேலாண்மை இயக்குநர் விசாகன், 'டாஸ்மாக்' அதிகாரிகள் ராமதுரை முருகன், பன்னீர்செல்வம், பாஸ்கர் மற்றும் செந்தில் பாலாஜியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக கூறப்படும் ரதேஷ், கார்த்திக், ரமேஷ் உள்ளிட்டோர் பெயர்கள் இடம் பெற்றது.

இந்த வழக்கில் மதுபான உற்பத்தி ஆலைகள், சரக்கு உரிமம் பெற்ற நிறுவனங்கள், பாட்டில் நிறுவனங்கள் மற்றும் அடையாளம் தெரியாத 'டாஸ்மாக்' ஊழியர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் 45 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதில் முக்கிய ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்கள் சிக்கின. அதன் அடிப்படையில் இந்த வழக்கில் கரூரைச் சேர்ந்த கார்த்திக், ரமேஷ் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் செந்தில் பாலாஜி முன் ஜாமீன் பெற்றுள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய ஐபிஎஸ் அதிகாரியின் சகோதரரான ரதேஷை போலீசார் தேடி வருகிறார்கள். அவர். வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் அனைத்து விமான நிலையங்களுக்கும் 'லுக்-அவுட்' நோட்டீசை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழங்கி உள்ளனர்.

SCROLL FOR NEXT