தமிழக செய்திகள்

‘சலைன்’ நீருக்கு பதில் குழாய் தண்ணீரா? - அரசு ஆஸ்பத்திரியில் வாலிபர் புகாரால் பரபரப்பு

வாலிபர் மூக்கில் சொருகப்பட்டு இருந்த டியூப்புடன் எழுந்து சென்று ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த டாக்டர்கள், நர்சுகளிடம் கடும் வாக்குவாதம் செய்தார்.

ஆஸ்பத்திரியில் டாக்டர், நர்சுக்கு பதில் தொழிலாளி ஒருவர் சிகிச்சை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி

பெரியபாளையம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் குடும்ப தகராறு காரணமாக எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை உறவினர்கள் மீட்டு மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மூக்கின் வழியாக டியூப் பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

சலைன் நீர்

இந்த நிலையில் இரவு அவருக்கு குளுக்கோஸ் பாட்டிலில் “சலைன்” நீருக்கு பதில் அங்குள்ள கழிவறையில் இருந்து தண்ணீரை பிளாஸ்டிக் டப்பாவில் பிடித்து பணியில் இருந்த தொழிலாளி ஒருவர் ஊற்ற முயன்றார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் அந்த தொழிலாளியிடம் கடும் வாக்குவாதம் செய்தார். அப்போது அந்த தொழிலாளி, நேரடியாக குழாயில் பிஸ்லரி தண்ணீர் வருகிறது என்று கூறினார்.

இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த வாலிபர் மூக்கில் சொருகப்பட்டு இருந்த டியூப்புடன் எழுந்து சென்று ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த டாக்டர்கள், நர்சுகளிடம் கடும் வாக்குவாதம் செய்தார்.

மேலும் அவர் ஆஸ்பத்திரியில் இருந்து சாலைக்கு வந்து அங்கிருந்தவர்களிடம் நடந்ததை கூறி கூச்சலிட்டார். இதனால் ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆஸ்பத்திரி ஊழியர்கள் அந்த வாலிபரை சமாதானம் செய்தனர்.

இந்த காட்சிகள் அனைத்தும் ஆஸ்பத்திரியில் இருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து உள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்பத்திரியில் டாக்டர், நர்சுக்கு பதில் தொழிலாளி ஒருவர் சிகிச்சை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வீடியோவில் தொழிலாளி குழாயில் பிடித்த தண்ணீரை குளுக்கோஸ் பாட்டிலில் ஊற்ற முயன்றதும் பதிவாகி உள்ளது. இதற்காக அந்த பிளாஸ்டிக் குளுக்கோஸ் பாட்டிலின் மேல் பகுதி அறுத்து வைக்கப்பட்டு இருந்தது.

பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த விவகாரத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து உள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை டீன் பாலாஜியிடம் கேட்டபோது, ‘சம்பவம் குறித்து முறையாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட அந்த வாலிபர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்து உள்ளார். அவரை பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

SCROLL FOR NEXT