டேங்கர் லாரிகளை பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆயில் கிடங்கு முன்பு வரிசையாக நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கிருந்து நடைபெறும் பெட்ரோல், டீசல் விநியோகம் தற்போது பாதிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் சங்ககிரி நாரணப்பன்சாவடி பகுதியில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு சொந்தமான ஆயில் கிடங்கு செயல்பட்டு வருகிறது.
இங்கிருந்து சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சுமார் 100 டேங்கர் லாரிகள் மூலம் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த டேங்கர் லாரிகளில் 12 ஆயிரம், 14 ஆயிரம், 20 ஆயிரம், 24 ஆயிரம், 25 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரிகள் உள்ளன. இவற்றில் சுமார் 250 டிரைவர்கள் மற்றும் கிளீனர்கள் பணியாற்றி வருகின்றனர். வெளிமாவட்டங்களில் இருந்து வரும் டேங்கர் லாரி டிரைவர்கள் இரவு நேரங்களில் தங்களது வாகனங்களை ஆயில் கிடங்கு வளாகத்தில் நிறுத்திவிட்டு அங்குள்ள ஓய்வறையில் தங்குவது வழக்கம்.
பின்னர் அதிகாலை எழுந்து லாரிகளில் லோடு ஏற்றிக்கொண்டு தங்களது பணிக்கு சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நிறுவன நிர்வாகம் தங்களை மனிதாபிமானத்துடன் நடத்தாமல் இழிவுபடுத்தி வருவதாக கூறி டிரைவர்கள் மற்றும் கிளீனர்கள் புகார் கூறி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு ஓய்வறையில் தூங்கிக் கொண்டிருந்த 30-க்கும் மேற்பட்ட டிரைவர்கள் மற்றும் கிளீனர்களை அதிகாரிகள் அங்கிருந்து வெளியேற்றியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த டிரைவர்கள் மற்றும் கிளீனர்கள் இன்று காலை வழக்கம்போல் லாரிகளில் லோடு ஏற்றிச் செல்லாமல் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் டேங்கர் லாரிகளை பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆயில் கிடங்கு முன்பு வரிசையாக நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கிருந்து நடைபெறும் பெட்ரோல், டீசல் விநியோகம் தற்போது பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டிரைவர்கள் கூறுகையில், “எங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். அதிகாரிகள் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய தீர்வு காண வேண்டும். அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தால் மட்டுமே மீண்டும் பணிக்கு திரும்புவோம்” என தெரிவித்தனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.