வீடுகள்தோறும் பசுமை மின்சாரம். தன்னிறைவு பெற்ற பசுமைத் தமிழ்நாடு. மார்ச் 2027-க்குள் 1-லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின் இணைப்பு எனும் இலக்கை வென்றிட தமிழ்நாடு மேற்கூரை சூரியசக்தி மானியத்திட்டத்தை அமைச்சர் நிர்மர் குமார் தொடங்கி வைத்தார்.
சென்னை, தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் வழிகாட்டுதலின்படி, எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் "வீடுகள்தோறும் பசுமை மின்சாரம், தன்னிறைவு பெற்ற பசுமைத் தமிழ்நாடு என்னும் இலக்கை வென்றிட, தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் சார்பில் தமிழ்நாடு சூரியசக்தி இணையதளத்தினை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு, பசுமை ஆற்றல் கட்டமைப்பில் முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் கூடிய தூய்மையான மின்சார உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், வீடுகள்தோறும் மேற்கூரை சோலார் மின் உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, பொதுமக்கள் வீடுகள்தோறும் மேற்கூரை சோலார் திட்டத்தை எளிதாக தெரிந்துகொண்டு, மானிய விவரங்களை அறிந்து, விண்ணப்பிக்கும் வகையில் தமிழ்நாடு மேற்கூரை சூரியசக்தி மானியத்திட்டம் (Tamilnadu Rooftop State Subsidy Scheme) ஒன்று புதியதாக உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் 05.08.2026 அன்று சட்டமன்றத்தில், தமிழ்நாட்டில் மேற்கூரை சோலார் மின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு கூடுதல் மானியம் அறிவித்ததுடன், இதற்காக நடப்பாண்டில் ரூ. 50 கோடி நிதி ஒதுக்கீடும் செய்துள்ளார். அதன்படி, 05.08.2026 முதல் விண்ணப்பிக்கும் நுகர்வோர்களுக்கு, மத்திய அரசின் நிதியுதவியுடன் தமிழ்நாடு அரசின் சிறப்பு கூடுதல் மானியமும் சேர்த்து நேரடி மானியம் வழங்கப்படுகிறது.
1 கிலோவாட் வரை- ரூ.35,000
2 கிலோவாட் வரை- ரூ.70,000
3 கிலோவாட் வரை- ரூ.1,00,000 வரை வழங்கப்படும்.
மத்திய அரசின் மானியம் வரவு வைக்கப்பட்டவுடன், இந்த மாநில இணையதளம் தானாகவே பொறுப்பேற்று, மானியம் தொகையை விடுவிக்கும். தமிழ்நாட்டிற்கான கூடுதல் மானியத் தொகைக்கு இரண்டாவது விண்ணப்பம் எதுவும் பதிவு செய்ய தேவையில்லை.
தமிழ்நாட்டில் இதுவரை பிரதம மந்திரி மேற்கூரை சூர்யாகர் திட்டத்தின் மூலம் 1,13,714 மேற்கூரை சோலார் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 97,732 சோலார் மின் இணைப்புகள் வெற்றிகரமாக பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இதன் மூலம் 337.49 மெகாவாட் பசுமை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும், தமிழ்நாட்டின் தாழ்வழுத்த மற்றும் உயரழுத்த மின் இணைப்புகள் உட்பட மொத்த மேற்கூரை சோலார் மின் உற்பத்தி நிறுவுதிறன் 1,859.27 மெகாவாட்டைக் கடந்துள்ளது.
மேற்கூரை சோலார் திட்டத்தை பொதுமக்கள் எளிதாக அணுகி பயன்பெறும் வகையில், https://tnebltd.gov.in/usrp/ என்ற புதிய மேற்கூரை சூரியசக்தி இணையதளம் இன்று தொடங்கி வைக்கப்படுகிறது.
இந்த இணையதளத்தின் வாயிலாக பொதுமக்கள் வீடுகளின் மேற்கூரை சோலார் திட்டம் குறித்த முழுமையான தகவல்கள், மத்திய மற்றும் தமிழ்நாடு அரசுகளின் மானிய விவரங்கள், மேற்கூரை சோலார் அமைப்பதற்கான வழிமுறைகள், விண்ணப்பிக்கும் நடைமுறைகள், விண்ணப்பத்தின் தற்போதைய நிலை, அங்கீகரிக்கப்பட்ட சோலார் நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய தகவல்களைப் ஆகியவற்றினை எளிதில் தெரிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுவதால், மேற்கண்ட மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்படும் வரையில் இத்திட்டம் செயல்படுத்தப்படாது.
எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் மானியத்திட்டத்தினை தொடங்கிவைத்து நிகழ்ச்சியில் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் வீடுகள்தோறும் மேற்கூரை சூரியசக்தி மின்உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், பொதுமக்கள் எளிதாகவும் விரைவாகவும் பயன்பெறும் வகையில் மேற்கூரை சூரியசக்தி திட்டத்திற்கான ஒருங்கிணைந்த இணையதளம் உருவாக்கப்பட்டு தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மேற்கூரை சூரியசக்தி திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, ஒன்றிய அரசின் மானியத்துடன் தமிழ்நாடு அரசின் கூடுதல் மானியத்தையும் இணைத்து வழங்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் மேற்கூரை சூரியசக்தி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது, நிறுவனம் மூலம் சூரியசக்தி அமைப்பை நிறுவுவது, அதனைத் தொடர்ந்து மின் மீட்டர் பொருத்துவது உள்ளிட்ட பல்வேறு செயல்முறைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இச்செயல்முறைகளை பொதுமக்களுக்கு மேலும் எளிமைப்படுத்தும் நோக்கில், அனைத்து சேவைகளையும் ஒருங்கிணைத்து ஒரே இணையதளத்தில் வழங்கும் வகையில் இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஒருங்கிணைந்த இணையதளத்தின் மூலம் பொதுமக்கள் விண்ணப்பிக்கும்போது, ஒன்றிய அரசின் மானியத்தைப் பெறுவதற்கான தொடர்புடைய இணையதளத்திற்கும் நேரடியாகச் செல்லும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், தகுதியான பயனாளிகளுக்கு தமிழ்நாடு அரசின் கூடுதல் மானியமும் வழங்கப்படும் வகையில் செயல்முறைகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
மின் மீட்டர் பொருத்துதல் தொடர்பான பணிகள் பொதுமக்களுக்கு எளிதாகவும் விரைவாகவும் நடைபெறும் வகையில், அதற்கான செயல்முறைகளும் இந்த ஒருங்கிணைந்த இணையதளத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் மூலம், மேற்கூரை சூரியசக்தி திட்டத்தின் பல்வேறு பணிகளை ஒரே தளத்தில் எளிமையாக மேற்கொள்ள முடியும்.
அடுத்த மார்ச் மாதத்திற்குள் குறைந்தபட்சம் ஒரு லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி அமைப்புகளை நிறுவுவதை இலக்காகக் கொண்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேற்கூரை சூரியசக்தி அமைப்புகளுக்கான மானிய உதவிகள் பல்வேறு நிறுவுதிதிறன் அளவுகளுக்கேற்ப வழங்கப்பட்டு வருகின்றன. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட அதிகமான வீடுகளிலும் மேற்கூரை சூரியசக்தி அமைப்புகளை நிறுவுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும் பட்சத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைதச்சரின் ஒப்புதல் பெற்று, கூடுதல் நிதி உதவி பெற்று மானியத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மேற்கூரை சூரியசக்தி திட்டத்திற்கான சேவைகள் மின்சார வாரியத்தின் வாடிக்கையாளர் செயலியுடனும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் பொதுமக்கள் தனியாக மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய அவசியமின்றி, செயலியின் வாயிலாகவே தொடர்புடைய சேவைகளைப் பெறும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது, எவ்வளவு காலமாக நிலுவையில் உள்ளது போன்ற விவரங்களையும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் கண்காணிப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேற்கூரை சூரியசக்தி திட்டம் தொடர்பான விண்ணப்ப செயல்முறைகள், மானியங்கள், மின் மீட்டர் பொருத்துதல் உள்ளிட்ட பணிகளில் ஏதேனும் குறைபாடு அல்லது சிரமம் ஏற்பட்டால், பொதுமக்கள் அதனை வாடிக்கையாளர் இணையதளத்தின் வாயிலாக உடனடியாகத் தெரிவிக்கலாம்.
மேலும், ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு வழங்கும் மானியங்கள், விண்ணப்பத்தின் செயல்படுத்தும் நிலை மற்றும் ஒவ்வொரு கட்டத்திலும் நிலுவையில் உள்ள பணிகளை கண்காணிக்கும் வசதிகள் அனைத்தும் ஒரே இணையதளத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
மேற்கூரை சூரியசக்தி பயன்பாட்டை பொதுமக்களிடையே அதிகளவில் கொண்டு சேர்க்கும் வகையில், பல்வேறு நிலைகளில் விழிப்புணர்வு மற்றும் பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை மேலும் விரிவுபடுத்துவதற்கான முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாக இந்த ஒருங்கிணைந்த மேற்கூரை சூரியசக்தி இணையதளம் அமைந்துள்ளது. இதனை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.