மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற நபரை, உயிரை பணயம் வைத்து ரெயில்வே கேட் கீப்பர் காப்பாற்றியுள்ளார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அரசூர் ரெயில்வே கேட் லெவல் கிராசிங் அமைந்துள்ளது. அந்த ரெயில்வே கிராசிங்கில் ரெயில் வருவதற்காக கேட் போடப்பட்டிருந்தது.
ரெயில்வே கேட் அருகே நின்றிருந்த ஒரு நபர், ரெயில் வருவதைப் பார்த்து கேட்டை கடந்துவந்தார். அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொள்ள முயன்றார்.
அங்கு பணியில் இருந்த கேட் கீப்பர் இதைக் கண்டதும் விரைந்து செயல்பட்டார். ஒரு நொடிகூட வீணாக்காமல் ஓடிச்சென்று அந்த நபரை ரெயில் தண்டவாளத்தில் இருந்து இழுத்து காப்பாற்றினார். அந்த ரெயில் கிராசிங்கை கடந்து சென்றது.
இதுதொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.
தனது உயிரை பணயம் வைத்து தற்கொலைக்கு முயன்ற நபரை காப்பாற்றிய கேட் கீப்பரை அப்பகுதி மக்கள், ரெயில்வே அதிகாரிகள் உள்பட பலரும் பாராட்டினர்.
சமூக வலைதளங்களிலும் அந்த கேட் கீப்பருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.