தமிழகத்தில் உள்ள சிறு, குறு விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போரின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், நடப்பு நிதியாண்டில் கூட்டுறவுத் துறை மூலம் ரூ.3,000 கோடி கடன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக கூட்டுறவுத் துறையின் கீழ் மாநிலம் முழுவதும் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
கிராமப்புறப் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், விவசாயிகளுக்குத் துணையாக இருக்கும் உபரித் தொழில்களை ஊக்குவிக்கவும் இந்த நிதியாண்டில் புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கால்நடை வளர்ப்பு (ஆடு, மாடு, கோழி வளர்த்தல்), மீன் வளர்ப்பு தொழில்கள் மற்றும் தேனீ வளர்ப்பு உள்ளிட்ட வேளாண் சார்ந்த மற்றும் அதன் துணைத் தொழில்களுக்கு முழுக்க முழுக்க வட்டியில்லாமல் இக்கடன் தொகை வழங்கப்பட உள்ளது.
மாநில அளவில் மாவட்ட வாரியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதில், அதிகபட்சமாக திருச்சி மாவட்டத்திற்கு ரூ.440 கோடி கடன் தொகை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.
திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கால்நடை மற்றும் பால் உற்பத்தித் தொழில் பரவலாக இருப்பதால், அங்குள்ள விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையில் இந்த அதிகப்படியான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் வேளாண் சாகுபடிக்காகப் பயிர்க்கடன் பெற்று, அதனை எவ்வித நிலுவையுமின்றி முழுமையாகத் திருப்பிச் செலுத்திய விவசாயிகளுக்கு மற்றொரு அதிரடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தகைய தகுதியுள்ள விவசாயிகளுக்கு, வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் புதிய பயிர்க்கடன்களை விரைந்து வழங்க வேண்டும் என அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கும் கூட்டுறவுத் துறை தலைமை அலுவலகம் கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இதன் மூலம் அக்டோபர் மாதத்தில் தொடங்கும் அடுத்தகட்ட சாகுபடிப் பணிகளுக்கு விவசாயிகளுக்குப் பணத்தட்டுப்பாடு ஏற்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.